சென்னை:
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் டி.வி.அந்தோணி காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், நள்ளிரவு அவர் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர்.
டி.வி.அந்தோணியின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
“தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவருமான டி.வி.அந்தோணி உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற வேதனை மிகுந்த செய்தி கேட்டு துயரமுற்றேன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றிருந்த காலகட்டத்தில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராகவும், கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றி, பல்வேறு ஊரக வளர்ச்சிப் பணிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர். பிறகு சென்னை மாநராட்சியின் சிறப்பு அதிகாரியாகவும் பணியாற்றி, கிராமப்புற மற்றும் நகர்ப்புற நிர்வாகத்தில் முத்தான திட்டங்களை நிறைவேற்றக் காரணமாக இருந்தவர்.
தலைமைச் செயலாளராக இருந்த நேரத்தில் பெண்ணுரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். மாநிலத்தில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை செம்மையாக செயல்படுத்துவதில் முனைப்பு காட்டியவர். மகளிர் மேம்பாட்டுக்காகப் பாடுபட்டதற்காகவும் அவரது நிர்வாகத் திறமையைப் பாராட்டியும்மத்திய அரசே பத்மபூஷன் விருதினை வழங்கிச் சிறப்பித்ததை இந்த நேரத்தில் நினைவு கூர்ந்திட விரும்புகிறேன்.
ஐசிஎஸ் குடும்பத்திலிருந்து இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்தாலும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளை, தேவைகளை அறிந்து- மாநில திட்டக்குழு உள்ளிட்ட அரசின் பல்வேறு நிலைகளில் சிறப்பாகப் பணியாற்றி, தமிழகத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்ட ஒரு அனுபவமிக்க, நேர்மையான, திறமையான அதிகாரியின் மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் சக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.