டாவோஸ்
பிரதமர் மோடி மற்றும் இந்தியாவை ஜெர்மன் நாஜியுடனும் ஹிட்லருடனும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீண்டும் ஒப்பிட்டு பேசி உள்ளார்.
கடந்த வருடம் விதி எண் 370 ஐ விலக்கிக் கொண்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதால் மாநிலம் முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இணையதளம், தொலைப்பேசி மற்றும் மொபைல் சேவைகள் முடக்கப்பட்டன.
இந்த நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இந்த நடவடிக்கைகளுக்காகத் தொடர்ந்து மோடியின் மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஆயினும் பிரதமர் மோடி காஷ்மீர் பகுதி இஸ்லாமிய தீவிரவாதிகளில் பிடியில் இருந்து மீளவும், இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் காஷ்மீர் இணையவும் இந்த நடவடிக்கைகள் அவசியம் எனத் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்துக் கொண்ட பாகிஸ்தான் பிரதமர், “மோடியின் இந்திய அரசு காஷ்மீரில் நடந்துக் கொள்ளும் விதமானது ஜெர்மனியின் நாஜி அரசுக்கு ஒப்பானதாக உள்ளது. கடந்த 1930-34 ஆம் வருடம் அங்கு ஹிட்லர் நடந்துக் கொண்டதை மோடி தற்போது பின்பற்றி வருகிறார். இந்தியாவைப் போன்ற ஒரு பல கலாச்சாரம் மற்றும் மதச்சார்பின்மை கொண்ட நாட்டுக்கு இது ஒரு பேரழிவு ஆகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
இம்ரான் கான் இவ்வாறு இந்தியாவையும் மோடியையும் நாஜி மற்றும் ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசுவது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும். காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில் இருந்தே அவர் இது போல ஒப்பிட்டுப் பேசி வருகிறார்.