தால்பும்கர், ஜார்க்கண்ட்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தால்பும்கர் பகுதியில் யானைகள் வழித்தடம் குறுக்கிடுவதால் விமான நிலைய கட்டுமான திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளது. இந்த வனப்பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின் அண்டை மாநிலமான மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள வனப்பகுதி இம்மாநில வனப்பகுதியுடன் சேர்ந்துள்ளது. எனவே இரு மாநில வனங்களிலும் உள்ள யானைகள் ஜார்க்கண்ட் மாநிலம் தால்பும்கர் பகுதி வழியே சென்று வந்துள்ளன
சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய விமான நிலையம் அமைக்க தால்பும்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 100 ஏக்கர் நிலப்பரப்பு அப்போதைய ஜார்க்கண்ட் அரசினால் ஒதுக்கப்பட்டது. இந்த நிலப்பரப்பு அங்க பகுதியில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இது குறித்து சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டது.
இதையொட்டி வனத்துறை அதிகாரிகள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ஆய்வு நடத்தினார்கள். அப்போது இந்த விமான நிலையம் அமைக்க உள்ள இடம் யானைகள் வழித்தடத்தின் இடையே அமைந்துள்ளது கண்டறியப்பட்டது. இதனால் வனத்துறை அதிகாரிகளின் அறிவுரைப்படி இந்த பகுதியில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.