டில்லி
சீன நாட்டில் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பாலூட்டி விலங்குகள் மற்றும் பறவைகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவும் ஒரு வகையான நோய்த் தொற்று கரோனா வைரஸ் ஆகும்.. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் இருமல், மூச்சுக் காற்று, சளி, ரத்தம் மூலமாகப் பிறருக்கும் அந்த பாதிப்பு பரவ வாய்ப்புள்ளது என்பதால் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க வேண்டும். அந்நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொள்ளா விட்டால் தீவிர சுவாசப் பிரச்சினைகள் ஏற்பட்டு உயிரிழப்பு நேரிடக்கூடும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில்தான் கரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருந்து. அந்த வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி நூற்றுக்கணக்கானோர் அங்கு உயிரிழந்தனர். அதனால், தீவிர மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மூலமாக அந்த வகை வைரஸ் தொற்று முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு மக்களிடையே பீடித்திருந்த அச்சம் சற்று விலகியிருந்தது.
கடந்த சில நாள்களாகச் சீனத் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் நகரில் கரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்நோயால் பாதிக்கப்பட்டு 3 போ் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 250-க்கும் அதிகமானோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன.
அந்த வைரஸ் இந்தியாவில் பரவாமல் இருக்க சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் விமான நிலையங்களிலேயே மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்படுகின்றனா். சென்னை விமான நிலையத்திலும் அத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டா் குழந்தைச்சாமி இதுகுறித்து,: ”மக்கள் கரோனா வைரஸ் தாக்கம் குறித்து அச்சப்படத் தேவையில்லை. ஏனெனில் அது மிகச் சாதாரணமான ஒரு பாதிப்புதான். சரியான விழிப்புணர்வும், முன்னெச்சரிக்கையும் இருந்தால், அந்நோய் வராமல் நம்மை காத்துக் கொள்ள முடியும்.
கரோனா வைரஸ் பாதிப்பு எதுவும் தமிழகத்தில் இல்லை. ஆயினும், மாநிலம் முழுவதும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் விரிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.