டெல்லி: டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், குடியிருப்பாளர்கள் சேமித்த ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் 30 பைசாவும், மாதத்திற்கு 20,000 லிட்டர் தண்ணீரும் இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
டெல்லியில் உள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 8ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. வாக்குகள் எண்ணப்பட்டு பிப்.11ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சார களத்தில் இறங்கி உள்ளன. பாஜக முதல்கட்ட வேட்பாளர்கள் என்று 57 பேர் கொண்ட பட்டியலை அறிவித்துள்ளது. இந் நிலையில் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை காங்கிரஸ் வாக்குறுதிகளாக அறிவித்திருக்கிறது.
டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், குடியிருப்பாளர்கள் சேமித்த ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் 30 பைசாவும், மாதத்திற்கு 20,000 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி தந்திருக்கிறது.
இதுதொடர்பாக, டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா கூறி இருப்பதாவது: இந்த திட்டங்கள் மூலம் 25 முதல் 30 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படும்.
ஆம் ஆத்மி அரசின் இலவச நீர் திட்டம், குடிநீர் திருடும் கும்பல்களுக்கு உபயோகமாக இருந்தது. ஆம் ஆத்மி அரசாங்கம் எந்தவொரு கணக்கீடும் இல்லாமல் மாதத்திற்கு 20,000 லிட்டர் தண்ணீரை இலவசமாக கொடுத்தது. ஒருபோதும் நீர் சேமிப்பில் கவனம் செலுத்தவில்லை.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 பைசா சேமிக்கலாம். எனவே, ஒரு குடும்பம் 10,000 லிட்டர் சேமித்தால் 3,000 கிடைக்கும். பணம் நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படும்.
ஆம் ஆத்மி அரசாங்கம் வீடுகளுக்கு சுகாதாரமற்ற தண்ணீரை வழங்கியது. கடந்த 5 ஆண்டுகளில் நகரத்தில் நீர் தரத்தில் 70 சதவீதம் வீழ்ச்சியை பதிவு செய்து உள்ளது என்றார்.
காங்கிரசின் இந்த குற்றச்சாட்டுக்கு டெல்லி நீர் வாரிய துணை தலைவர் தினேஷ் மோகானியா பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ்,ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் பேசியதாவது: ஒரு நாளைக்கு 135 லிட்டர் தண்ணீர் தேவை. ஒரு குடும்பத்தில் 5 உறுப்பினர்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு நாளைக்கு 600 லிட்டருக்கும் அதிகமான நீர் தேவைப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 20,000 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது என்றார்.