ஷீரடி: ஷீரடி கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படும் என்ற தகவலில் உண்மை இல்லை என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் ஷீரடி என்ற இடத்தில் சாய்பாபாவுக்கு கோயில் உள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்தும், மக்கள் இங்கு வந்து சாய்பாபாவை வணங்கிச் செல்வர். பிரபல ஆன்மீக சுற்றுலாத் தளமாகவும் இந்த இடம் இருந்து வருகிறது.
பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால், மத்திய அரசு சமீபத்தில் விமான நிலையத்தை அமைத்தது. இந் நிலையில் ஷீரடி கோயில் நாளை முதல் காலவரையறையின்றி மூடப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
ஆனால், கோயில் திறந்திருக்கும், பக்தர்கள் எப்போதும் போல வந்து தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சாய்பாபா டிரஸ்ட் சிஇஓ முகில்கர் கூறியிருப்பதாவது:
வழக்கம் போல் கோயில் திறந்திருக்கும். பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் எப்போதும் போல வந்து தரிசனம் செய்யலாம். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்படும் என்றார்.
சாய்பாபா பிறந்த இடம் குறித்து உறுதியான தகவல்கள் இதுவரை இல்லை. ஆனாலும், ஷீரடியில் சாய்பாபா அதிக நாட்கள் வாழ்ந்தார் என்பது நம்பிக்கை. அதனால் அவர் அங்குதான் பிறந்தார் என்று பலரால் நம்பப்படுகிறது.
அவரது பிறந்த ஊர் தொடர்பாக நீண்ட காலமாக சர்ச்சை இருந்து வரும் நிலையில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, சாய்பாபாவின் பிறப்பிடம் பர்பானியில் இருக்கும் பத்ரியில் இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும், அங்கு வளர்ச்சி பணிகளுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்வதாக அறிவித்திருந்தார். இதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.