டெல்லி: ராஜீவ் கொலையாளிகளை சோனியா மன்னித்தது போல, நிர்பயா குற்றவாளிகளை மன்னிக்குமாறு வழக்கறிஞர் இந்திரா விடுத்த வேண்டுகோளை ஆஷா தேவி நிராகரித்துள்ளார்.
டெல்லியில் மருத்துவ மாணவி 2012-ம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு வரும் 1ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுகிறது.
அதற்கான புதிய உத்தரவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் பிறப்பித்தது. தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந் நிலையில், வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர் நிர்பயாவின் தாயாருக்கு ஒரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார்.
தனது கணவர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளை எப்படி சோனியாகாந்தி மன்னித்தாரோ அதே போன்று மன்னித்துவிடுங்கள் என்று கோரியிருந்தார். அதை அவர் டுவிட்டர் பதிவிலும் வெளியிட்டார்.
அவரது இந்த கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அவரது இந்த கோரிக்கையை அறிந்த நிர்பயாவின் தாயார் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இது வரை நான் அரசியல் பற்றி எதுவும் பேசியது இல்லை. ஆனால் இப்போது சொல்கிறேன். எனது மகள் கொல்லப்பட்ட 2012ம் ஆண்டு முதல் இந்த விவகாரத்தை கையாள்பவர்கள் இப்போது அரசியல் செய்கிறார்கள். அரசியல் லாபத்துக்காக இப்போது இப்படி நடந்துகொள்கின்றனர் என்று கூறியிருக்கிறார்.