ஸ்ரீநகர்:

ச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டி ருந்த மொபைல் போன் இணைப்பு மற்றும் எஸ்எம்எஸ் உள்பட இணையதள சேவைகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளன.இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆண்டு (2019)  ஆகஸ்டு மாதம்  சிறப்பு அந்தஸ்து  ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதம் 4ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் தொலைபேசி மற்றும் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. மேலும் பத்திரிகை களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இதை எதிர்த்து தொடரப்பட்டவழக்கில், உச்ச நீதிமன்றம் இணையதளம் மூலம் கருத்து தெரிவிப்பது ஒருவரின் அடிப்படை உரிமை, காஷ்மீரில்  தனிநபர் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியதுடன் ஒரு வாரத்திற்குள் அங்கு தொலைபேசி சேவை வழங்குவது குறித்து முடிவெடுக்கவும் மத்தியஅரசுக்கு கடந்த 10ந்தேதி உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  ஜம்மு காஷ்மீரில் ஃபிரிபெய்ட் சந்தாதாரர்களுக்கு இன்று மீண்டும் செல்போன் அழைப்பு மேற்கொள்ளும் வசதியும், எஸ்எம்எஸ் சேவையும் வழங்கப்பட்டுள்ளது. தீவிர ஆலோசனைக்குப் பின் செல்போன் சேவையும் எஸ்எம்எஸ் சேவையும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைச் செயலர் ரோகித் கன்சால் கூறியுள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டு (2019) அக்டோபர் 14ந்தேதி 72 நாட்களுக்கு பிறகு  ஜம்மு காஷ்மீரில் போஸ்ட்பெய்டு மொபைல் சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.