பிரெசில்ஸ்: 10 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டும் ஓட்டுநர் பேருந்தை இயக்கிய சம்பவம் பெல்ஜியம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பெல்ஜியத்தில் டி லிஜின் எனும் தனியார் பேருந்து நிறுவனத்தில் 58 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். வழக்கமான வழித்தடத்தில் அவர் பேருந்தை இயக்கினார்.
கோன்டிச் நகர் வந்தவுடன் புகைப்பிடிக்க சென்ற தருணத்தில், அடையாளம் தெரியாத மர்ம நபரால் பயங்கரமாக கத்தியால் தாக்கப்பட்டார். அதிர்ச்சி அடந்த ஓட்டுநர், வலியை பொருட்படுத்தாமல் மீண்டும் பேருந்தை செலுத்தினார்.
15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள லிய்ரே நகரை வந்தடைந்தவுடன், பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக இறக்கிவிட்டார். பின்னர், பேருந்தை வில்லிபுரோக் பணிமனைக்குச் செலுத்தினார்.
அவரை கவனித்த சக பணியாளர்கள், உடலில் இருந்த ரத்தக்காயங்களை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது தான் உடலில் மிகப்பெரிய ரத்த காயம் இருப்பதை ஓட்டுநர் உணர்ந்தார்.
இதையடுத்து அவரை சக ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். ஓட்டுநரின் கீழ் உடற்பகுதி, கழுத்து, கைகள் மற்றும் வலது கால் ஆகிய பகுதிகளில் 10 முறை கத்தியால் குத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் பயணிகளை காப்பாற்றிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.