டெல்லி: ஜேஎன்யூ மாணவா் சங்க தலைவா் அய்ஷி கோஷை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
ஜேஎன்யூவில் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாஜக மாணவர் அமைப்பினர் என்றும் குற்றச்சாட்டு எழுந்தன.
தாக்குதலில் மாணவர் சங்க தலைவர் அய்ஷி கோஷ் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில், அய்ஷி கோஷை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது, நீதிக்கான போராட்டத்தில் நாட்டு மக்கள் அனைவரும் மாணவா்கள் பக்கமே உள்ளனா்.
உங்களுடைய போராட்டம் நீதியானது என நாட்டு மக்களுக்குத் தெரியும். தொடா்ந்து போராடுங்கள் என்று பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். போராட்டத்துக்கு கேரள மக்கள் பூரண ஆதரவு தருகின்றனர்.
முதலமைச்சரான நீங்கள் எங்கள் பக்கம் நிற்பது எமக்கு பெரும் மன ஆறுதலை தருகிறது என்று கூறி ஆய்ஷி கோஷ் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பு தொடா்பாக தனது முகநூல் பக்கத்தில் பினராயி விஜயன் கூறியிருப்பதாவது : எதிர்ப்பு குரல்களை வன்முறையைப் பயன்படுத்தி அடக்கலாம் என்று சங் பரிவார் நினைக்கிறது.
ஆனால், அதற்கு எதிராக சமரசமற்ற யுத்தத்தை மாணவா்கள் நடத்தி வருகின்றனர். இந்த யுத்தத்தை அய்ஷி கோஷ் தலைமையேற்று நடத்தி வருகிறார். அவருடைய கண்களில் போராட்டத்தின் வலிமையை கண்டேன் என்று கூறியுள்ளார்.