வாஷிங்டன்: ஈரான் நாட்டின் மீது போர்தொடுக்கும் விஷயத்தில் அமெரிக்க அதிபரை கட்டுப்படுத்தும் தீர்மானம், அமெரிக்க நாடாளுமன்றத்தின் கீழவையான பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது.
ஈரான் ராணுவ தளபதி குவாஸிம் சுலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டது மற்றும் ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது போன்ற சம்பவங்களால், மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்தன.
ஆனால், ஈரான் மீது அமெரிக்க போரெழுவதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. உச்சபட்சமாக அந்நாட்டு ராணுவத் தலைமையகம் பெண்டகனே அதிபரோடு முரண்பட்டது.
இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற கீழவையான பிரதிநிதிகள் சபையில் போர் தொடர்பாக டிரம்ப்பின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
அச்சபையில் தலைவராக இருப்பவர் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நான்சி பெலோஸி. பிரதிநிதிகள் சபையில் ஜனநாயகக் கட்சிக்கே பெரும்பான்மை உள்ளது.
இதுதொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில், தீர்மானத்திற்கு ஆதரவாக 224 வாக்குகள் பதிவாகின. மேலும், அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், மேலவையான செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்படும் இத்தீர்மானம் அங்கு தோல்வியடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், “இத்தீர்மானம் தன்னைக் கட்டுப்படுத்த முடியாது” என்று கருத்து தெரிவித்துள்ளார் டிரம்ப்.