டெல்லி: ஜாமியா, அலிகாரில் கடும் நடவடிக்கை எடுத்த காவல்துறை, ஏன் ஜேஎன்யூ விவகாரத்தில் மவுனமாக இருக்கிறது, கலவரத்தை ஏன் தடுக்க வில்லை என்று அலிகார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், லெப்டினென்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது இவ்வாறு கூறியிருக்கிறார். அவர் மேலும் கூறியதாவது: இந்த கல்வி நிலையங்களையும் கண்ணில் மஞ்சள் காமாலை வந்தவர்கள் போல் காவல்துறை கையாண்டு இருக்கிறார்கள்?
சட்டத்தின் பாதுகாவலர்களாக இருக்க வேண்டியவர்கள், முற்றிலும் வகுப்புவாத மனம் கொண்டவர்களாக மாறிவிட்டனர். மாணவர்களை நடத்திய விதம் கொடூரமானது. ஜாமியா போராட்டத்தில் அழைக்கப்படாமல் வந்த அவர்கள், ஜேஎன்யூக்கு அழைக்கப்பட்டும், வன்முறையை தடுக்க அவர்கள் வரவில்லை.
இதுபோன்றதொரு நிலைமையை நான் எதிர்கொண்டிருக்கிறேன். 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தை தடுக்க எனது படையினர் அகமதாபாதில் இருந்தனர். அப்போது எனது படைகளுடன் இதுபோன்றதொரு நிலையை எதிர்கொண்டேன்.
ஜனவரி 4ம் தேதி ஜேஎன்யூவில் இடையூறு செய்தது யார்? அங்குள்ள பேராசிரியர்களால் நடத்தப்பட்ட இடதுசாரி தாராள சதி என்று சொல்லலாம். அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது பல முறை ஜேஎன்யூக்கு விஜயம் செய்தேன். அப்போதைய கடுமையான நுழைவு விதிமுறைகளில் ஈர்க்கப்பட்டேன் என்றார்.