நீர்மஹாலை பராமரிக்கும் மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பை மானிக்ய மன்னர் குடும்பத்தினரிடம் அளிக்க முடியாது என்றும், அரசு நிர்வகிக்க தடையில்லை என்றும் திரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அட்வகேட் ஜெனரல் அருண் காந்தி, ”தலைமை நீதிபதி ஏ.கே. குரேஷி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. மனுதாரர்களாக இருக்கும் அரச வாரிசான பிரதியோட் கிஷோர் மாணிக்க தேபர்மா மற்றும் அவரது தாயார் பிபி குமாரி தேவி தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், நீர்மஹால் அரசுக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது.
ருத்ராசாகர் ஏரியால் சூழப்பட்ட திரிபுராவின் நீர்மஹால், மகாராஜா பிர் பிக்ரம் கிஷோர் மாணிக்க பகதூரால் கட்டப்பட்டது. 1930ம் ஆண்டு மன்னரால் நியமிக்கப்பட்ட இந்த அரச கோடைக்கால ரிசார்ட்டை, பிரிட்டிஷ் நிறுவனமான மார்ட்டின் அண்ட் பர்ன் ஒன்பது ஆண்டுகளில் கட்டியது. இந்த அரண்மனை திரிபுராவின் 500 ஆண்டு பழமையான மாணிக்க வம்ச ஆட்சியின் சொத்தாக இருந்தது, இப்போது பல தசாப்தங்களை கடந்து, சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமாக மாறிவிட்டது. திரிபுராவின் ஏரி அரண்மனை என்று பிரபலமாக அறியப்படும் இந்த அரண்மனை, நீர்நிலைகளால் சூழப்பட்ட நாட்டின் இரண்டு அரண்மனைகளில் ஒன்றாகும். மற்றொரு அரண்மனை ராஜஸ்தானின் ஜல் மஹால் ஆகும்.
இந்த சொத்து 1974ம் ஆண்டு அப்போதைய அரச வாரிசான கிரிட் பிக்ரம் கிஷோர் மாணிக்க டெபர்மாவால் அரசுக்கு அளிக்கப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. கடந்த 2005ம் ஆண்டு, கிரிட் பிக்ரம் கிஷோர் மாணிக்க டெபர்மாவாவின் மனைவி பிபு குமாரி தேவி மற்றும் அவரது மகன் பிரத்யோட் கிஷோர் மாணிக்க டெபார்மா ஆகியோர் சொத்துக்களை பராமரிக்கும், பவர் ஆப் அட்டார்னி மட்டுமே வழங்கியதாகக் கூறி நீதிமன்றத்தை நாடினர்.
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2015ம் ஆண்டு சிவில் நீதிமன்றம் ஒன்று, அரச குடும்பத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்ததுடன், அந்தச் சொத்தை அரச குடும்பத்திடம் ஒப்படைக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கில் அரச குடும்பத்தினரின் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது” என்று தெரிவித்தார்.
மேலும், நீர்மஹாலை அரச குடும்பத்தால் பராமரிக்க முடியாத காரணத்தாலேயே, மாநில அரசுக்கு ஒப்படைக்கப்பட்டது என்கிற தங்களின் வாதத்தை உயர்நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது என்பதால், இச்சொத்தின் உரிமையாளராக தற்போது மாநில அரசே உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஏனெனினும் இதை ஏற்க முடியாது என்று தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ள பிரதியோட் கிஷோர் மாணிக்க தேபர்மா, “நீர் மஹால் – என் தந்தை மாநில அரசுக்கு நீர் மஹாலை பரிசளித்தார் என்பதற்கு ஒரு ஆவணத்தையாவது வழங்குமாறு நான் சவால் விடுக்கிறேன். கடைசியாக, நீர் மஹாலுக்கு எந்த பணமும் என் தந்தைக்கு செலுத்தப்படவில்லை என்பதை மாநில அரசு ஒப்புக் கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து நான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளேன். ஆனால் அதற்கு முன்பு உங்கள் அனைவரிடமும் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். ஒரு அரச குடும்பத்தாலேயே அவர்களின் சொத்துக்களை அரசிடமிருந்து மீட்டு பாதுகாக்க முடியாத நிலை இருக்கிறதெனில், ஏழை மக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த வழக்கிற்காக கோடிக் கணக்கில் செலவிட்டுள்ளேன். என் தந்தை இப்போது என்னுடன் இல்லை, என் தாய்க்கு 75 வயதாகிவிட்டது. தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதியாகவே கருதப்படுகிறது. நான் இவ்விவகாரத்தில் எவ்வித சமரசமும் செய்துக்கொள்ள மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.