சென்னை:

மிழக சட்டமன்றத்தின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.  அதைத்தொடர்ந்து  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் உரையாற்றத் தொடங்கினார்.

அவ்ரது உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உள்பட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். குடியுரிமை சட்டதிருத்தம் குறித்து முதலில் பேச அனுமதிக்க வேண்டும் கூறிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், அதுகுறித்து  பேச முயன்றார். அதற்கு அனுமதி வழங்கப்படாத நிலையில், திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.  அவர்களை கவர்னர் சமாதானப்படுத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,  தங்களது கருத்துக்களை விவாதத்தின்போது கூறுங்கள், தற்போது அமைதியாக இருங்கள் என்று கூறினார்.

ஆனால், அதை ஏற்க மறுத்த திமுக, சட்டமன்றத்தில், இருந்து  வெளி நடப்பு செய்தது. அவர்களைத் தொடர்ந்து கூட்டணி கட்சியினரும் வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் தொடர்ந்து உரையாற்றி வருகிறார். கவர்னர்  ஆங்கில உரையைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தமிழில் மொழிபெயர்த்து உரையாற்றுகிறார். ஆளுநர் உரையில் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் பிறகு, சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, பேரவை அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் பிற்பகலில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். வரும் வெள்ளிக்கிழமை வரை பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இன்றைய கூட்டத்தொடரில் பங்கேற்ற தமீமும் அன்சாரி எம்எல்ஏ, No CAA என்ற வாசகம் பொறித்த பனியன் அணிந்து வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.