சென்னை :

டைபெற்று முடிந்துள்ள ஊரக உள்ளாட்சிக்கான 2 கட்ட தேர்தல் முடிவுகள் ஆளும் அதிமுகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.க்கள், இந்நாள் அமைச்சர்கள், முக்கிய தலைவர்களின் வாரிசுகள், உறவினர்கள் பெருமளவில் தோல்வியை சந்தித்து உள்ளார்.

இதற்கு காரணமாக சிஏஏக்கு ஆதரவாக அதிமுக வாக்குளித்தது என்று கூறப்பட்டாலும், திறமையற்ற மாநில அரசின் நிர்வாகம் காரணமாகவே மக்களிடம் எழுந்த அதிருப்தியே தேர்தலில் வெளிபிபட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சேலம் மாவட்டம் நடுக்கும்பை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சேந்தமங்கலம் அதிமுக எம்எல்ஏ சந்திரசேகரின் மகன் யுவராஜ் தோல்வி அடைந்தார். அவர் 4 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

அவரது தந்தை சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருக்கும் நிலையில் கூட மக்கள் யுவராஜுக்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளனர். இது ஆளுந்தரப்பு மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தின் வெளிப்பாடாக தெரிகிறது.

மணச்சநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த ஸ்ரீதரிடம் தோற்றுப் போனார்.

அதிமுகவைச் சேர்ந்த  மாநிலங்களவை முன்ளாள் எம்.பி.யான  அன்வர் ராஜாவின் மகன், மகள் ஆகிய இருவரும் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்துள்ளனர். இதற்கு அவர் சிஏஏக்கு அதிமுக அளித்த ஆதரவுதான்  காரணம் என்று கூறி உள்ளார்.

மானாமதுரை அதிமுக எம்.எல்.ஏ. மனைவி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தி.மு.க. பிரமுகரிடம் தோல்வியடைந்தார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம் கீழநெட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மானாமதுரை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. நாகராஜ் மனைவி சிவசங்கரி போட்டியிட்டு 41 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஒன்றியத்தில் ஆலாம்பாடி ஊராட்சித் தலைவர் பதவிக்கு காங்கயம் முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், காங்கயம் ஒன்றியச் செயலாளருமான என்.எஸ்.என். நடராஜின் மனைவி சாந்தியும், 3-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு மகன் தனபாலும் போட்டியிட்டனர். இருவரும் திமுகவினரிடம் தோல்வி அடைந்தனர்.

தமிழகத்தில் வளர்ச்சிப் பணிகள் முடங்கி உள்ள நிலையில், தமிழக அரசோ, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக ஜால்ரா அடித்து வருகிறது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் பதிவேடு, முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற சட்ட மசோதாக்களுக்கு ஆதரவு அளித்தது போன்ற காரணங்களால், தமிழகத்தில் உள்ள சிறுபான்மையின மக்கள் அதிமுக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

ஆனால் ஆளும் அதிமுகவோ, அரசின் சாதனைகளை கூறி வெற்றி பெற்றுவிடலாம் என கனவு கண்ட நிலையில், அதிமுக அரசை மக்கள் நேரடியாகவே  புறக்கணித்துள்ளனர். அரசுமீதான அதிருப்தியை,  திமுக உள்பட எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசியல் செய்து வருகிறது. அதே வேளையில் அதிமுகவில் உள்ள சிறுபான்மையின தலைவர்களும், அதிமுக தலைமை மீது கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுபோன்ற காரணங்களார், மாநில அரசு மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதன் எதிரொலியே உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்து உள்ளது.