சென்னை:
மத்தியஅரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்திருத்தத்தை, அதிமுக ஆதரித்ததால்தான் உள்ளாட்சி தேர்தலில் பெரும் தோல்வியை சந்தித்து உள்ளது என்றும், இதனால்தான் தனது குடும்பத்தினரும் தோல்வியை சந்தித்தாக அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா கூறி உள்ளார்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று முடிந்து நேற்று முதல் வாக்குகள் எண்ணும்பணி தொடர்ந்து வருகிறது.
இந்த தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், முன்னாள் அதிமுக எம்.பி.யான அன்வர் ராஜா குடும்பத்தினரும் தோல்வி அடைந்து உள்ளனர்.
அன்வர் ராஜா மகள் ராவியத்துல் அதபியா ராமநாதபுரம் மண்டபம் ஒன்றியம் 2- வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் தோல்வி அடைந்தார். அதுபோல, அன்வர் ராஜாவின் மகன் நாசர் அலி மண்டபம் ஒன்றிய உறுப்பினர் 6-வது வார்டில் போட்டியிட்ட நிலையில் தோல்வி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அவர்கள் தோல்வியடைந்தது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அதிமுக வாக்களித்ததே காரணம் என்று, எதிர்த்தரப்பினர் பரப்பிய பொய்யை நம்பி இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு எதிராக வாக்களித்துள்ளனர் என்றார்.
மேலும, இந்த வார்டுகளில் வேறு அதிமுகவினர் யாரும் போட்டியிட முன் வராததால், தோல்வி கிடைக்கும் என்று தெரிந்தும், தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பதால், எனது மகள் மற்றும் மகனை நிறுத்தி வைத்தேன் என்று தெரிவித்தார்.
குடியுரிமை திருத்த சட்டம் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆனால், எந்த பாதிப்பும் இருக்காது என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். எனினும், போகப் போகத்தான் அது தெரியும். தற்போதைய சூழலில் முஸ்லிம்கள் எங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை”.
தேசிய குடியுரிமை பதிவேடு நாடு முழுவதும் அமலாகும் என்ற அச்சம் சிறுபான்மையினர் மத்தியில் நிலவுகிறது, சிறுபான்மையினர் அச்சப்படுவதால், அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யும் என்று நம்புகிறேன் என்றவர், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு அதிமுக வாக்களித்ததால், அதன்பாதிப்பு உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலித்துள்ளது. சிறுபான்மையினர் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.