நெல்லை:
மோடி, அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன் மீது ஏற்கனவே 3 பிரிவுகளில் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 2 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவின் நெருக்குதல் காரணமாக மேலும் பல வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, காங்கிரஸ் கட்சியின் மூத்த பேச்சாளரும், தமிழ் இலக்கியவாதியும் நெல்லை கண்ணன் கலந்து கொண்டார். அப்போது, சிஏஏக்கு எதிராக வாக்களித்த அதிமுக எம்.பி.க்களை கடுமையாக விமர்சித்ததுடன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோரையும் கடுமையாக சாடினார்.
அத்துடன் குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியின் சோலியை முடிக்க வேண்டும்என அவர் பேசிய வீடியோ வைரலான நிலையில், `பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா ஆகியோரைக் கொலை செய்யத் தூண்டும் வகையில் நெல்லை கண்ணன் பேசியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்’ என்று நெல்லை மாவட்ட பா.ஜ.க சார்பாக மாநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நெல்லை கண்ணன் மீது 504 (பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வேண்டுமென்றே செயல்படுவது), 505 (குற்றம் செய்யத் தூண்டுதல்), 505(2) (இரு சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், நெல்லைக்கண்ணன் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கிருந் வெளியேற்றப்பட்டார். அவரை தேடி வந்த காவல்துறையினர் நேற்று இரவு பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கைது செய்தனர்.
இந்த நிலையில், நெல்லை கண்ணன் மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒரே ஒரு தடவை சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பேச்சுக்காக நெல்லைக்கண்ணன் மீது இதுவரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பாஜக அரசின் கைத்தடியாக செயல்படும், தமிழகஅரசும், காவல்துறையும், நெல்லைக்கண்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகளை பதிவு செய்து, அவருக்கு தொல்லை கொடுக்கும் வகையிலும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொள்வதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.