டெல்லி:
நாட்டின் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் இன்றுடன் ஓய்வுபெறும் நிலையில், நாட்டின் 28-வது ராணுவ தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே பதவியேற்றார்.
இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக செயல்பட்டு வந்த பிபின் ராவத்தின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, அவரை முப்படைகளில் தலைமை தளபதியாக இந்திய அரசு நியமனம் செய்துள்ளது.
இந்த நிலையில், பிபின் ராவத் பதவிக்கு, புதிய ராணுவ தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே நியமனம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் 28-வது தலைமை தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே இன்று பொறுப்பேற்றார். அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்த பிபின் ராவத், அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் முகுந்த் நரவனே, 1980-ம் ஆண்டு இந்திய ராணுவத்தின் சீக்கிய லைட் படைப்பிரிவில் சேர்ந்தவர். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் பணியாறியவர். ஜம்மு-காஷ்மீரில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியனுக்கும், கிழக்குப் பகுதியில் ஒரு தரைப்படைக்கும் கட்டளை அதிகாரியாக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.