சபரிமலை
மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நேற்று திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
சபரிமலைக் கோவில் 41 நாட்கள் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைக்காலம் முடிந்து கடந்த 27 ஆம் தேதி நடை அடைக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணிக்கு மகர விளக்குப் பூஜைக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டது. நேற்று மாலை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாரதனை காட்டி சன்னிதி கதவைத் திறந்தார்.
சபரிமலை மேல் சாந்தியாக ஏ கே சுதிர் நம்பூதிரியும் மாளிகைப்புரம் மேல் சாந்தியாக எம் எஸ் பரமேஸ்வரன் நம்பூதிரியும் பொறுப்பு ஏற்றனர். நேற்று மாலை கோவில் நடை திறக்கப்படும் முன்பே ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். கோவில் நடை திறக்கப்பட்டு 18 படிகளுக்கும் பூஜை முடிந்த பிறகு பக்தர்கள் சரண கோஷத்துடன் கோவிலுக்குள் நுழைந்தனர்.
அதைத் தொடர்ந்து இன்று ஏராளமான பக்தர்கள் கூடம் சபரிமலையில் அலைமோதி வருகிறது. பாதுகாப்புப் பணியில் ஏற்கனவே 1875 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் மேலும் 1397 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.