புதுச்சேரி

புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இடையே அறிக்கைச் சண்டை தொடர்ந்து வருகிறது.

புதுச்சேரி மாநில ஆளுநர் கிரண் பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது.  புதுச்சேரி மாநிலத்தில் முக்கிய அம்சம் சுற்றுலா ஆகும்.  எனவே அதை மேம்படுத்த முதல்வர் மது ஆலைகள், சூதாட்ட விடுதிகள், லாட்டரிகள் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்க முன் வந்தார்.   ஆனால் இதை ஆளுநர் கிரண் பேடி கடுமையாக எதிர்த்தார்.

இதனால் மாநிலத்தின் வருவாய் பெருமளவில் பாதிப்படையும் என நாராயணசாமி எடுத்துக் கோரியும் கிரண் பேடி ஒப்புக் கொள்ளாமல் பிடிவாதமாக மறுத்தார்.  இதையொட்டி நாராயணசாமி, “கிரண் பேடிக்கு மனசாட்சி என்பதே இல்லாமல் உள்ளார்.  மாநிலத்தின் முன்னேற்றத்தைக் கெடுக்கும் ராட்சசியாக நடந்துக் கொள்கிறார்.  இவர் நடவடிக்கைகள் சர்வாதிகாரி ஹிட்லரின் சகோதரி போஒல் உள்ளது” என கருத்து தெரிவித்தார்.

இதற்கு கிரண் பேடி அனுப்பிய இ மெயிலில், “என்னை ஆளுநர் எனவும் மதிக்காமல் கண்டபடி பேசி வருகிறீர்கள்.  கடந்த சில நாட்களாக அது எல்லை தாண்டி செல்கிறது.   இது உங்கள் நல்லொழுக்கம், கண்ணியம், மதிப்பின் எல்லை மீறி உள்ளது.  உங்களுடைய பேச்சை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும்.  இனியாவது நீங்கள் இது போல நடவடிக்கைகளை விட்டு விடுவீர்கள் என நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு நாராயணசாமி, “புதுச்சேரி மக்கள் ஒரு ஜனநாயக அரசுக்காக வாக்களித்துள்ளனரே தவிரக் கொடுங்கோல் ஆட்சிக்கு இல்லை.   எனது கருத்துக்கள் அனைத்தும் உங்களுடைய கொடுங்கோன்மையான இணை ஆட்சிக்கு எதிராக மக்களும் அதிகாரிகளும் தெரிவிக்கும் கருத்துக்கள் ஆகும்.   புதுச்சேரி மக்களுக்கு எதிராக நடக்கும் முன்பு நீங்கள் யூனியன் பிரதேச விதிகள் 239ஏ மற்றும் 240 ஆகியவற்றைப் படிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” எனப் பதில் அளித்துள்ளார்.