வாஷிங்டன்: அமெரிக்காவில் வங்கியில் கொள்ளையடித்தப் பணத்தை, பொதுமக்களை நோக்கி வீசி, அனைவரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்று கூறிய முதியவர் தற்போது சிறையில் உள்ளார்.
கொலராடோ மாகாணத்தில் உள்ள அகடமி வங்கியில் புகுந்த வெள்ளை தாடி மற்றும் மீசை கொண்ட முதியவர் ஒருவர், தன்னிடம் பயங்கர ஆயுதம் இருப்பதாக கூறி, ஊழியர்களை மிரட்டி பல லட்சம் டாலர்களைக் கொள்ளையடித்துள்ளார்.
பின்னர், அந்த டாலர்களை மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு கொண்டுசென்று, அனைவரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்று சொல்லி, அவற்றை வீசி எறிந்துள்ளார். பலரும் விழுந்தடித்துக்கொண்டு அவற்றைப் பொறுக்கியுள்ளனர்.
பின்னர் தகவலறிந்த போலீசார் அந்த முதியவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டாலர்களைப் பொறுக்கி எடுத்தப் பலரும் அதை மீண்டும் வங்கியிலேயே ஒப்படைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.