முர்ஷிதாபாத்
இஸ்லாமியர் போல் போலியாகக் குல்லா அணிந்து கல் எறிந்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டங்களில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. ரெயில் உள்ளிட்ட பல பொதுச் சொத்துக்கள் கல் எறியப்பட்டு சேதம் அடைந்துள்ளன. நாட்டில் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று மூன்றாம் நாளாகப் பேரணி நடத்தினார். அந்த பேரணியில் அவர், “வெள்ளிக்கிழமை அன்று அதாவது இன்று நாம் பார்க் சர்க்கஸ் திடலில் ஒரு அமைதி கூட்டம் நடத்தி அங்குப் பிரார்த்தனை நடத்த உள்ளோம். எனவே அனைவரும் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
தயவு செய்து யாரும் பாஜகவின் வலையில் விழுந்து விட வேண்டாம். அவர்கள் இந்த போராட்டத்தை இந்து முஸ்லீம் கலவரமாக மாற்ற மிகவும் முயன்று வருகின்றனர். எனக்கு உளவுத்துறை அளித்த தகவலின்படி பாஜக தனது தொண்டர்களுக்காக இஸ்லாமியர் அணியும் குல்லாக்கள் ஏராளமாக வாங்கி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. அதைப் போட்டு வன்முறை நடத்தி அதைப் புகைப்படமாக்கி இனக் கலவரமாக்க அவர்கள் முயல்கின்றனர்” என உரையாற்றினார்.
இந்நிலையில் முர்ஷிதாபாத் நகரில் ஒரு ரெயில் எஞ்சின் சோதனை ஓட்டம் நடத்திக் கொண்டிருந்த போது அதன் மீது கல் எறிந்த ஆறு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் தலைவரான அபிஷேக் சர்க்கார் என்னும் 21 வயது இளைஞர் பாஜகவை சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் லுங்கி அணிந்து தலையில் இஸ்லாமியரைப் போல் குல்லா அணிந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் வாசிகள் அபிஷேக் சர்க்கார் பாஜகவை சேர்ந்தவர் எனத் தெரியப்படுத்தி உள்ளனர். ஆனால் அம்மாவட்ட பாஜக தலைவர் கௌரிசங்கர் கோஷ், “அவர் எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் கிடையாது. இந்த சம்பவத்துக்கும் எங்கள் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.