டில்லி

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிவிட்டரில் பதிவிட்டதால் பெண் குழந்தையைக் காப்போம் விளம்பரத்தில் இருந்து நடிகை பரிணீதி சோப்ரா நீக்கபட்டுளதாக கூறப்படுகிறது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.   எதிர்க் கட்சிகள் மட்டுமே இதை எதிர்த்து குரல் கொடுத்து வந்த வேளையில் அசாம் மாணவர் சங்கம் போராட்டத்தைத் தொடங்கியது  அந்த போராட்டம் பல மாநிலங்களுக்கும் பரவி பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.   நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இந்த சட்டத்தை எதிர்த்துப் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  அதை அடக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வருகிறன.  அவ்வகையில் சாவ்தான் இந்தியா என்னும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக் கொண்ட நெறியாளர் சுஷாந்த் சிங் சட்ட எதிர்ப்புப் பேரணியில் கலந்துக் கொண்டதை அடுத்து அவர் அந்நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலத்தில் மத்திய அரசின் அபிமான திட்டமான பெண் குழந்தைகளைக் காப்போம் விளம்பரத்தில் புகழ்பெற்ற நடிகையான பரிணீதி சோப்ரா பங்கேற்று வருகிறார்.  அவர் சமீபத்தில் இந்த புதிய சட்டத்தை எதிர்த்து தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

இந்த பதிவுக்காக அவரை விளம்பரத்தில் இருந்து அரியானா அரசு நீக்கி உள்ளதாக டிவிட்டரில் செய்திகள் பரவி வருகின்றன.  தற்போது இந்த செய்தி டிவிட்டரில் பலராலும் பதியப்பட்டு வைரலாகி வருகின்றன.  ஆயினும் இந்த செய்தி உண்மையா என்பதை அரசும் பரிணீதி சோப்ராவும் உறுதி செய்யவில்லை.