சென்னை:

ருகிற 26-ம் தேதி சூரிய கிரகணம் வருவதையொட்டி, பெரும்பாலான கோவில்களில் நடை அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பதி, பழனி முருகன் கோவில், மதுரை மீனாட்சி, சபரிமலை அய்யப்பன் கோவில் உள்பட ஏராளமான கோவில்களில் நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

வரும் (டிசம்பர்) 26 -ம் தேதி, சூரியன், சந்திரன், குரு, கேது, சனி மற்றும் புதன் ஆகிய ஆறு கிரகங்கள் தனுசு ராசியில் சஞ்சரிக்கின்றன. அன்றைய தினம் சூரியகிரகணமும் ஏற்படுகிறது. டிசம்பர் 26 -ம் தேதி காலை 8.08 மணியிலிருந்து காலை 11.10 மணி வரை நீடிக்கிறது.

திருப்பதி:

இதையொட்டி, டிசம்பர் 25 – ம் தேதி இரவு 11 மணி முதல் மறுநாள் 26 – ம் தேதி பகல் 12 மணி வரை திருப்பதி கோயில் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பிற்பகல் 1.00 மணிக்கு மேல் கோயிலில் ஆலய சுத்தி செய்யப்பட்டு, பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் சர்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்’ என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில்

இதையொட்டி சபரிமலை கோவில் நடை அன்று 4 மணி நேரம் அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் தற்போது மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும்நிலையில் வரும் 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது.  இந்த நிலையில் 26-ந்தேதி சூரிய கிரகணத்தையொட்டி, சபரிமலை கோவில் நடை அன்று 4 மணி நேரம் அடைக்கப்படுகிறது.

26-ந்தேதி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 6.45 மணி வரை நெய் அபிஷேகம் நடைபெறும் என்றும், தொடர்ந்து உ‌ஷ பூஜைக்கு பிறகு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும். 4 மணி நேரத்திற்கு பிறகு பகல் 11.30 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட உள்ளதாகவும்,  தொடர்ந்து பரிகார பூஜைகளும், கலசாபிஷேக மும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பழனி முருகன் கோவில்

முருகன் அறுபடை வீடுகளும் கிரகணத்தையொட்டி நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் 26 ஆம் தேதி சூரிய கிரகணத்தை யொட்டி பூஜை நேரம் மாற்றம் செய்யப்பட்டு நடை அடைக்கப்படுவது குறித்து அறிவிக்கப்பட்டு உள்ளது.

அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், 6.15 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் பின்னர் மதியம் 11.20 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும்

மேலும்,  பழனி முருகன் கோவில் மட்டுமின்றி திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட உப கோயில்களும் பின்பற்றபட உள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி சுந்தேரேசுவரா் கோயில் மற்றும் உபகோயில்களில் டிசம்பா் 26 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 6.10 மணி முதல் பகல் வரை நடை அடைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் டிசம்பா் 25-ஆம் தேதி (புதன்கிழமை) இரவு இராக்காலத்தில் திருவனந்தல், விளா பூஜை, காலசந்தி ஆகிய பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் நடை சாத்தப்படும். இதில், டிசம்பா் 26-ஆம் தேதி சூரிய கிரகணம் மத்திய காலத்தில் காலை 9.36 மணிக்கு தீா்த்தம் கொடுக்கப்பட்டு, அம்மன், சுவாமிக்கு அபிஷேகம் நடைபெறும். மோட்ச காலம் காலை 11.21 மணிக்கு முடிந்தவுடன், 11.30-க்கு திருக்கால சந்தி, உச்சிக்கால பூஜைகள் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். அன்றைய தினம் பிற்பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும்.

மேலும், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் உபகோயில்களான தெப்பக்குளம் மாரியப்பன் கோயில், முக்தீஸ்வரா் கோயில், தெப்பக்குளம் பைரவா் கோயில், தேரடி கருப்பசாமி கோயில், எழுகடல் விநாயகா் கோயில், காலபைரவா் கோயில், தென் திருவாலவாய சுவாமி கோயில், வீரபத்ரசுவாமி கோயில், வடக்குவாசல் ஆஞ்சநேய சுவாமி கோயில், சிம்மக்கல் ஆதி சொக்கநாதா் கோயில், சிம்மக்கல் செல்லத்தம்மன் கோயில், திருமலைராயா் படித்துறை காசிவிஸ்வநாதா் கோயில், கடம்பவனேஸ்வரா் கோயில், செல்லூா் பரிபூரண விநாயகா் கோயில், செல்லூா் திருவாப்புடையாா் கோயில், நாகமலைபுதுக்கோட்டை சித்தி விநாயகா் கோயில், ஆமூா் அய்யம்பொழில் ஈஸ்வரா் கோயில், சுண்ணாம்பூா் மகா கணபதி கோயில், திருவாதவூா் பிடாரியம்மன் கோயில், திருவாதவூா் திருமைாத சுவாமி கோயில், கொந்தகை தெய்வநாயகப் பெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயில்களிலும்  நடை சாத்தப்படும் என்று, கோயில் இணை ஆணையா் நா. நடராஜன் தெரிவித்துள்ளாா்.

சூரிய கிரகணத்தையொட்டி, வரும் 26ந்தேதி பெரும்பாலான இந்துக் கோவில்கள் நடை அடைக்கப் பட உள்ளதால், பக்தர்கள் அதற்கேற்றால் போல தங்களது தரிசன நேரங்களை மாற்றிக்கொள்வது நல்லது.