பாட்னா: பாலியல் பலாத்கார சம்பவங்கள் பெருகி வருவதற்கு ஆபாச இணையதளங்களே காரணம். எனவே, அவற்றை முற்றிலும் தடைசெய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியுள்ளார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.
அவர் இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது கடிதத்தில் அவர் பல சம்பவங்களை மேற்கோள் காட்டியுள்ளார். ஐதராபாத்தில் பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், பீகாரின் பக்ஸார் மற்றும் சமஸ்திபூர் பகுதிகளில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவங்கள் ஆகியவற்றை அவர் உதாரணம் காட்டினார்.
“இணையதளம் விஷயத்தில் அளிக்கப்படும் வரம்பற்ற சுதந்திரமே இவற்றுக்கு முக்கிய காரணம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, மிக எளிதாக ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர்.
சிலர் பலாத்கார சம்பவங்களைப் படம்பிடித்து அவற்றைப் பதிவேற்றமும் செய்கின்றனர். இதனைக் காணுகின்ற மனம் வக்கிர சிந்தனைகளுக்கு உள்ளாகிறது. எனவே, ஆபாச இணையதளங்களுக்கு நாடு முழுவதும் தடை விதிப்பது மட்டுமே இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும்” என்று தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.