சென்னை:
மத்திய அரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு நாடு முழுவதும்பலத்த எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி இன்று திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் பல மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தொடர்ந்துள்ள வழக்கோடு திமுகவின் வழக்கும் நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில், அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு திமுகத்தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்து உள்ளார். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இநத் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் திமுகவின் தோழமை கட்சிகள் உள்பட மக்கள்நீதி மய்யம் கட்சி உள்பட மேலும் சில கட்சிகள் கலந்துகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.