குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக தரப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று எழுதிய கடிதத்தில், ” பாஜக அரசு செய்திருக்கும் திருத்தம் என்பது, 1955ல் இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாக எந்தவிதப் பிரச்சினையுமின்றி நடைமுறையில் இருந்துவரும் குடியுரிமைச் சட்டத்தில் செய்துள்ள திருத்தமாகும். அந்தத் திருத்தத்திற்கு ஏதேனும் அவசிய அவசர தேவை இருக்கிறதா என்பதும், அப்படி அவசரமென்றால், அதில் ஏன் மத ரீதியான இன ரீதியான பாரபட்சம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதும் தான் நாம் எழுப்பும் கேள்வி. ஈழத்தமிழர்களின் நலன் காக்கவும், சிறுபான்மையினரான இஸ்லாமிய சமுதாயத்தினரின் உரிமைகளைக் காக்கவும், மதரீதியாக நாட்டைக் கூறுபோடும் மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 17ம் தேதி திமுக போராட்டக் களம் காண்கிறது.
அணிதிரள்வோம், ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டென முழங்குவோம், நாடு காத்திடத் திரளுவோம், பாஜக அரசின் கொடுங்கோன்மைச் சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம். அதற்குத் துணை போன துரோக அதிமுக அரசை உள்ளாட்சித் தேர்தல் களத்தில் முறியடித்து உரிய பாடம் கற்பிப்போம்” என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று மு.க ஸ்டாலின் தலைமையில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சென்னைக்கு திமுக தொண்டர்களின் வருகை அதிகரித்துள்ளது.