அரசியல் சாசனத்திற்கு மட்டுமே கேரள அரசு கட்டுப்பட்டுள்ளது என்றும், ஆர்.எஸ்.எஸ் திட்டங்களுக்கு அல்ல என்றும் மத்திய அரசை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக சாடியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவு மற்றும் தனது சொந்த பலத்தை பயன்படுத்தி மத்திய அரசு நிறைவேற்றியதோடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று அதை அமல்படுத்தியது.
இச்சட்டத்தை எதிர்த்து பல மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இதை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்தப்போவது இல்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் அறிவித்துள்ளனர். இச்சட்டத்தை எதிர்த்து டில்லி ஜாமியா மில்லியா பல்கலை மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடியும் நடத்தினர். இதில் மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் இச்சட்டத்தை எதிர்த்து திருவனந்தபுரம் பாளையத்தில் உள்ள தியாகிகள் நினைவிடம் அருகே இடதுசாரி ஜனநாயக முன்னணியினர் சார்பில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணியினரும் கலந்துக்கொண்டனர். ஒரே மேடையில் கேரள முதல்வர் பினராயி விஐயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி ஆகியோர் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “சிறுபான்மையினருக்கு குடியுரிமை தரக்கூடாது என்று யார் சொன்னாலும் அது பற்றிக் கவலை இல்லை. கேரளாவில் நாங்கள் அதை ஏற்கமாட்டோம். நான் இதை கூறும்போது ஒரு மாநில அரசு இதுபோன்ற விவகாரங்களில் முடிவெடுக்க முடியுமா என சிலர் என்னை திருப்பிக் கேட்கலாம். மத்திய அரசு, மாநில அரசு, குடியுரிமை சட்டங்கள் என அனைத்துமே அரசியல் சாசனத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டிருக்கின்றன. நாம் எந்த அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி கூறி பதவியேற்றுக்கொண்டு இந்த அரசை அமைத்தோமோ, அந்த அரசியல் சாசனத்தை யார் நாசம் செய்ய நினைத்தாலும் நாங்கள் அதை எதிர்ப்போம்.
கேரள அரசு, அரசியல் சாசனத்துக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் உள்நோக்கம் கொண்ட திட்டங்களுக்கு அல்ல” என்று தெரிவித்தார்.