சேலம்:
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் பகுதியில் 92 வயது மூதாட்டி வேட்புமனு தாக்கல் செய்தார். இது பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதை யொட்டி, கடந்த வாரம் வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய நிலையில், இன்றுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது.
கடைசி நாளான இன்று பல இடங்களில் வேட்புமனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடை பெற்று வந்த நிலையில், சேலம் மாவட்டத்தின் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 92 வயது மூதாட்டி கனகவல்லி வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் ஏதோ மனு கொடுக்க வந்திருப்ப தாக பல எண்ணிய நிலையில், அவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள 92 வயது முதியப் பெண்மணியான கனகவல்லி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு முருங்கபட்டி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.