டில்லி
காந்தி, நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் விருப்பத்துக்கு மாறாக பாஜக இந்தியாவை ஜின்னாவின் பாதைக்கு மாற்றுவதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் கூறி உள்ளார்.
கடந்த செப்டம்பர் 1 அன்று அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து வெளியிடப்பட்டது. அந்த பட்டியலின்படி 19 லட்சம் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்தபடியாக தேசிய குடிமக்கள் பதிவேடு வடகிழக்கு மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ” பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் இந்துக்கள், பௌத்தர்கள், ஜெயின் மதத்தினர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி மக்கள் அனைவரையும் அகதிகளாக மத்திய அரசு ஏற்று. அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும்.
தேசிய குடியுரிமை பதிவேடு முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். யாரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அனைவரையும் தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டு வருவது சாதாரண செயல்முறைதான்’’ என்று அறிவித்தார்,
பாஜக அரசின் இந்த முயற்சிக்கு பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் ,‘பாஜக அரசு குடியுரிமை மசோதா தாக்கல் செய்தது முதல் மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. நமது நாடு முழுவதும் மதத்தின் அடிப்படையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது நாகரீகத்துக்கே இடமில்லாமல் போய் விடும்.
அதாவது பாகிஸ்தானின் இந்துத்துவா மாடல் போன்று இந்தியா மாறி விடும். எங்கள் கட்சியின் நிலைப்பாடு மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது என்பது ஆகும் மதத்தின் பெயரால் சுதந்திரப் போராட்டத்தின்போது நடந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர மகாத்மா காந்தி பெரும் முயற்சி செய்தார்.
இதுபோன்ற நடவடிக்கைகள் அவரது தியாகத்தை அர்த்தமில்லாமல் செய்து விடும்.
தற்போது பாஜக ஜின்னாவின் பாதையில் பயணம் செய்கிறது. அதாவது காந்தி, நேரு, ஆசாத், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் கனவுக்கு எதிராக இந்தியாவை மாற்றும் செயலில் பாஜக ஈடுபட்டு வருகிறது.’’ எனக் கூறி உள்ளார்.