ராஞ்சி: சத்திஸ்கரில் மாற்றம் கொண்டு வந்தது போல், ஜார்க்கண்ட் தேர்தலில் மாற்றம் வரும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி இருக்கிறார்.
ஜார்க்கண்டில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: சத்திஸ்கரில் பாஜக ஆட்சியின் போது பழங்குடியினர் நிலங்கள் வளைக்கப்பட்டன.
அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. தொழிற்சாலைகளுக்கு அவர்களின் நிலங்கள் வழங்கப்பட்டன. மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நாங்கள் அதை மாற்றினோம்.
இந்தியாவில் முதல் முறையாக, டாடா கையகப்படுத்திய நிலங்கள், பின்னர் பழங்குடியினருக்கே திருப்பி தரப்பட்டன. பாஜக எங்கு எல்லாம் ஆட்சியில் இருக்கிறதோ, அங்கு தொழிலதிபர்களுக்கு நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன.
ஆனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. காங்கிரஸ் இந்த நிலைமையை மாற்றும். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்பட்டன.
ஜார்க்கண்ட், சத்திஸ்கர் மாநிலங்களில் பழங்குடியின மக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஜிஎஸ்டியால் யாருக்கு பலன் வந்தது? விவசாயிகளின் நிலத்தையும், அவர்களது பொருளாதாரத்தையும் பறிக்க வேண்டும் என்பது தான் பாஜகவின் நோக்கம் என்றார்.