ஓரெழுத்தில் ஓராயிரம் ஆச்சரியம், சோ…

சோவின் நினைவு நாள் குறித்து ஏழுமலை வெங்கடேசனின் சிறப்புக் கட்டுரை

ஒரே நேரத்தில் ஒரு துறையில் மட்டுமே மின்னுவதுதான் பெரும்பான்மை ரகம். ஆனால் பல்துறை வித்தகராய் கடைசிவரை ஜொலிப்பது அரிதான சிறுபான்மை ரகம்

அப்படிப்பட்ட சிறுபான்மை ரகத்தைச் சேர்ந்தவர்தான், ஓரெழுத்து ஆச்சயர்மான, சோ அவர்கள்.

சினிமா, பத்திரிகை, சட்டம் எனப் பலதுறைகளில் தனக்காக பிரத்யேக சிம்மாசனத்தை ஏற்படுத்திக்கொண்டவர்.

இன்றைக்கு ஆட்சியைப் பிடிக்க எவன் தந்தாலும் அவனை மந்திரியாக்குகின்ற காரியத்தை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே முகமது பின் துக்ளக் நாடகத்திலும் திரைப்படத்திலும் தீர்க்கதரிசனமாய் காட்டியவர்.

தான் ஒருவன் எம்பியாகி, 450 எம்பிகளுக்கும் உதவி பிரதமர் தருவதாகச் சொல்லி பிரதமர் பதவியை அடையும் தந்திரோபாயத்தை காட்டியவர் அவர்.

கிளாச்சிகல் நையாண்டிதான் சோவின் முதல் அடையாளம். மொட்டைத்தலை, முட்டைக்கண், கண்ணாடி போன்றவை பின்னர் வந்த இரண்டாவது அடையாளம்.. எந்த விஷயத்தையும் எந்த நேரத்திலும் புதிய கோணத்தில் புரட்டி போட்டு நக்கலடிப்பதில் சோ அவர்கள் கில்லாடி.

சிவாஜி நடித்த 1963ல் பார் மகளே பார் படத்தில்தான் சிறிய மெக்கானிக் வேடத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், வக்கீலுக்கு படித்துவிட்டு நாடகங்களை நடத்திக்கொண்டிருந்த சோ.

சினிமாவில் ஆரம்பத்தில், இயக்குநர் கம் தயாரிப்பாளரான முக்தா சீனிவாசனிடம்தான் அதிக நெருக்கம், ஜெயலலிதாவும் அப்போது அவருக்கும் மிகவும் நட்பில் இருந்தார். முக்தாவின் படங்களிலும் சிவாஜியின் படங்களிலும் நகைச்சுவை நடிகராக சோ, பெரும்பாலும் இருப்பார்

அதிலும் முக்தா தயாரித்து இயக்கி ஜெய்சங்கர்- ஜெயலலிதா நடித்து 1968ல் வெளிவந்த பொம்மலாட்டம் படத்தில், ஜாம்பஜார் ஜக்கு என்ற காமெடி வேடத்தில் சோ கலக்கிய விதம் எந்த தலைமுறையும் ரசிக்கும் ஒரு மாஜிக் எனலாம்… அந்த படத்தில் வா வாத்தியாரே வூட்டாண்டே என்று மனோரமா சொந்தக்குரலில் பாடிய பாடல், தெறி ஹிட் என்பதைவிட, பல விஷயங்களுக்கு அடித்தளமிட்டது என்பதுதான் உண்மை. மனோரமாவிடம் இந்த அளவுக்கு பாடும் திறமையா என்று கர்நாடக இசைமேதை பாலமுரளிகிருஷ்ணாகூட சிலாகித்து சிலாகித்து பேசுவார் அந்த பாடலின் பின்னாலிருந்த குரலின் ஏற்ற இறக்கங்களை விவரித்து.

சென்னை பாஷையான வாத்தியாரே என்ற வார்த்தையை அதற்கு முன் நடிகர் சந்திரபாபு அடிக்கடி சினிமாவில் பேசியிருக்கிறார். நடிகர் பாலையாகூட, உச்சரித்திருக்கிறார். அதென்ன விந்தையோ தெரியவில்லை.

பொம்மலாட்டம் பட வாத்தியாரே என்ற வார்த்தை, சோவின் உச்சரிக்கப்போய் அதுவே, எம்ஜிஆர் படங்களில் தனித்துவமாக அமைந்துவிட்டது. சிவாஜியுடன் தொடர்ந்து நடித்துவந்த சோ, அறுபதுகளின் இறுதியில் எம்ஜிஆருடனும் கைகோர்த்தார்.

நாகேசுடன் எம்ஜிஆருக்கு லைட்டா மனவருத்தம் ஏற்பட்ட ஒரு காலகட்டம் வந்தது.. அந்த நேரத்தில் அவரின் படங்களில் நகைச்சுவை வேடத்தை சோ ஆக்கிரமிக்க ஆரம்பித்தார். அதிலும் எம்ஜிஆர்-ஜெயலலிதா காம்பினேஷனில் சோவின் காமெடி பின்னி பெடலெடுக்கும். ஒளிவிளக்கு, அடிமைப்பெண், மாட்டுக்கார வேலன், எங்கள் தங்கம், தேடிவந்த மாப்பிள்ளை, குமரிக்கோட்டம், ஒருதாய் மக்கள் என அது ஒரு பெரிய லிஸ்ட்டாக போகும்.

சினிமாவில் பக்கா ஆணாதிக்கவாதியாகவே இருந்த எம்ஜிஆரோடு, இன்னொரு ஆணாதிக்கவாதியான சோ சேர்ந்து நடித்த காட்சிகளெல்லாம் அன்றைக்கு அதகளம்.

திரையுலகில் எம்ஜிஆர் கதை எழுதிய ஒரே படம் கணவன்(1968). அதில் ஜூனியர் லாயரா சேர வரும் சோவிடம் சீனியர் லாயர் ராமராவ் கேட்பார், ‘’நீங்க ஏன் தம்பி இந்த லாயர் தொழிலுக்கு வந்தீங்க..?

சோ பதில்..” பொதுவாக நாம செய்யிற தொழில்ல நாம தப்பு பண்ணா நாம மாட்டிக்கூடாது. எலெக்ட்ரீஷியன் தப்பு பண்ணா ஷாக்கடிச்சி அவன் மாட்டிப்பான். டிரைவர் தப்பு பண்ணா ஆக்சிடெண்ல அவன் சிக்கிடுவான்..ஆனா லாயர் தொழில்லதான், நாம தப்பு பண்ணா, நாம மாட்டமாட்டோம். கட்சிக்காரன்தான் சாவான். அதான் சார்”

காதல் தொடர்பான காட்சிகளில், இந்த காலத்து பொண்ணுங்களோட, காதலெல்லாம் நோஸ்கட்லதான் ஆரம்பிக்கும், அப்புறம் அதுவே உன் பேஸ்கட்டே விழுந்து கிடக்கும் என்று கண்ணன் என் காதலன் படத்தில் எம்ஜிஆரிடம் பேசும் சோ, , அரசியல் பேசவேண்டிய சீன்களில் அதே எம்ஜிஆரின் வள்ளல்தன்மையையும் வசீகரத்தையும் ஜனங்கள் கொண்டாவதுபோல சித்தரித்து பல படங்களில் இன்னும்தூக்கிவைத்து பேசுவார்..

வாத்தியாரே வாத்தியாரே என்று சோ அழைத்த வார்த்தையை பின்னாளில் எம்ஜிஆர் படங்களில் சேர்ந்துகொண்ட தேங்காய் சீனுவாசன் இன்னும் கெட்டியாக பிடித்துக்கொண்டார். இன்று எம்ஜிஆரை வாத்தியார் என்றே குறிப்பிட்டு தலைப்பாகவே வைத்து எழுதப்பட்ட புத்தகங்கள் ஏராளம். சோவின் வாயிலிருந்து விழும் வார்த்தைகளுக்கு அவ்வளவு வலிமையும் சாகாவரமும் உண்டு.

அறிமுகமானதிலிருந்தே, சினிமாவில் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அரசியலைத் துவைத்து எடுத்தார்..அதிலும் கதை, திரைக்கதை, வசனம் போன்றவற்றில் அபார திறமை கொண்டவர் என்பதால், எந்த இயக்குநர், முன்னணி நடிகர் படத்தில் நடித்தாலும் அவருக்கு உண்டான காட்சியை அவர் தனித்தன்மையோடு மெருகேற்றிக்கொள்வார்

அரசியலை நக்கலடித்தபடியே அவர் பிரித்து மேய்ந்த விதத்தைச் சொல்லத் தனி புத்தகமே தேவைப்படும்.. ஒரு படத்தில், ‘’அண்ணே நீங்க ஒரு அரசியல்வாதி..அந்த ஆள் ஒரு பிரஸ் ரிப்போர்ட்டர். அவரை பகைச்சிகிறீங்களே..?’’

சோ… ‘’யோவ் நாட்டில் பேப்பர் படிக்கறவன்ல நூத்துல தொன்னூறு பேரு சினிமா மேட்டரை தான் படிப்பான்.. பத்து பேருதான் பாலிடிக்ஸ் படிப்பான்..

அந்த பத்து பேருலயே ரெண்டு பேருக்குத்தான் மேட்டரே புரியும்.. புரிஞ்சவன்லயும் ஒருத்தன்தான் ஞாபகம் வெச்சிருப்பான்..அந்த ஒத்த ஆளுக்காக நான் பயப்படணுமா?’’ என்பார்…

பத்திரிகைகளில் பெரும்பகுதி சினிமாக்காரர்களின் மேட்டர்தான்,  ஜனங்களும் சினிமா மேட்டரைத்தான் அதிகம் படிப்பார்கள் என்பதையும் அரசியலையெல்லாம் அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதையும்தான் அப்படி விளாசியிருப்பார்.

1974ல் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தில், திமுக அதிமுக என இரு கழகங்களையும் வறுத்தெடுத்திருப்பார். ஒரு பக்கம் திமுகவின் மேடைப்பேச்சுகளைக் கிண்டலடிப்பார்

”தடை பல வென்று வடை பல தின்று, வருகிறேன் தாயே, வைகை வளவன்..” என்று அரசியல்வாதி சோ வசனம் பேச, அண்ணி மனோரமா உடனே தனது கணவனாக வரும் இன்னொரு சோ பாத்திரமான கான்ஸ்டபிளிடம் சொல்வார், ”என்னங்க இவன், என்னென்னமோ பேசறான்..” அதற்கு கான்ஸ்டபிள் சோ சொல்லும் பதில்.. ”பேசறது எதுவுமே புரியலையா?, அப்ப அரசியல்ல பெரிய ஆளா வருவான்..”

அதிமுக ஆரம்பித்து அண்ணாயிசம் என முழங்கிக்கொண்டிருந்த எம்ஜிஆரை, அதே தங்கப்பதக்கத்தில், அப்பாயிசம் என காட்சிகள் வைத்து விமர்சிப்பார்..

பல படங்களில் நடித்த சோ, முகமது பின் துக்ளக் மட்டுமல்ல, மிஸ்டர் சம்பத், ஜெயலலிதாவின் நடிப்புக்கு பேர் வாங்கித்தந்த யாருக்கும் வெட்கமில்லை உள்பட சில படங்களையும் டைரக்ட் செய்தவர்.

எம்ஜிஆர்- சிவாஜி தலைமுறையைத் தாண்டி ரஜினி-கமல் சகாப்தத்திலும் சோ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தத் தவறியதே இல்லை. அதிலும் கணிசமாய் வயதில் இளையவரான சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான நட்பு மிகவும் அலாதியானது. ஆறிலிருந்து அறுபதுவரை படத்தைப் பார்த்தால் அந்த நட்பின் பிரதிபலிப்பு அப்படியே தெரியும். ரஜினி படங்களில் காமெடி ரோலில் வரும்போதெல்லாம் சோ பேசும் அரசியல், செய்யும் செய்கைகள் தியேட்டரில் கைத்தட்டல்களை அள்ளும். மனிதன், அதிசயப்பிறவி போன்ற படங்களெல்லாம் அதற்கு எடுத்துக்காட்டு.

நையாண்டி என எடுத்துக்கொண்டால், முதலில் பட்டென மனதுக்குள் எப்படி தோணுகிறதோ அதை அப்படியே சொல்லவேண்டும்..அதில் விருப்பு வெறுப்பை சேர்க்க ஆரம்பித்தால் கண்றாவியாகிவிடும்..தேவைப்பட்டால் நம்மை நாமே கிண்டலடித்துக்கொள்ளவும் தயங்கக்கூடாது.. என்பதெல்லாம் அவரெழுத்துக்கள் அடிக்கடி சொல்லிவந்த பாடம்..

1970 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று துக்ளக் பத்திரிகையை சோ கொண்டுவந்தபோது, முதன் முதலில் போடப்பட்ட அட்டைப்படத்தில் இரு கழுதைகள் பேசிக்கொள்ளும்..

‘’சோவின் பத்திரிகை வெளிவந்துவிட்ட தாமே’’ என்று சொல்லும் ஒரு கழுதையிடம் இன்னொரு கழுதை, ‘’அப்படியா இனிமே நமக்கு நல்ல விருந்துதான்’’ என்று சொல்லும். அதாவது பத்திரிகை கீழே வீசப்பட்டு கழுதைகள் தின்னும் அளவுக்கு இருக்கும் என்று, தன்னையே நக்கலடித்துக்கொண்டார் சோ.

ஆனால் துக்ளக் பத்திரிகை,, வாங்கிப்படித்த அத்தனை பேரையும் சோவின் நையாண்டிக்கு அடிமையாக்கிவிட்டிருந்து.. அவரின் விமர்சனத்தால் வெந்துபோய் நொந்துபோன அரசியல் தலைவர்கள்கூட அடுத்த இதழை வாங்கிப்படிப்பதில் அவ்வளவு காட்டினார்கள்..

தலையங்கம் மற்றும் கேள்வி-பதில் ஆகிய இரண்டே பகுதிகளை ஒரு வலுவான அடையாளமாக வைத்து ஒரு வாரப்பத்திரிகையை அவர் வெற்றிகரமாக நடத்தியது இன்றளவும் வியப்பின் உச்சம்தான்..

ஆமாம் துக்ளக்கை வாங்குபவர்கள் முதலில் ஒன்று தலையங்கத்தைப் படிப்பார்கள்.. இல்லையென்றால் கேள்வி பதில் பக்கத்திற்கு ஓடிப்போய் படித்துவிட்டு அதன் பிறகு தலையங்கத்துக்கு வருவார்கள்..காரணம்.. சோவின் எழுத்தில் இருந்த ஈர்ப்பு அப்படி..

நாடகம் மற்றும் புத்தகம் ஆகியவற்றைப் படைப்பதிலும் சளைக்கவில்லை.. கூவம் நதிக்கரையினிலே, வாஷிங்டனில் நல்லதம்பி எனப் பெரிய பட்டியலையே போடலாம்..

25 ஆண்டுகளுக்கு முன்பு தூர்தர்ஷனில் அவருடைய சரஸ்வதியின் செல்வன் என்ற தொடர், அரசியல் தலைவர்களை, பிரபலங்களை, நாட்டு நடப்புகளை பல்வேறு கோணங்களில் தோய்த்துத் தொங்கப்போட்டதால் அனைவரையும் தொலைக்காட்சியின் முன் அந்த நேரத்தில் கட்டிப்போட்டது..

சென்னைக்கு அருகே செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரத்தையடுத்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் எங்கள் பிளாட்டுகள் உள்ளன என்று வசனம் வைத்து, ரியல் எஸ்டேட்காரர்களை கிண்டலடித்தார் இன்று உண்மையில் திண்டிவனமும் விழுப்புரமும் ரியல் எஸ்டேட் காரர்களுக்கு சென்னைக்கு அருகேதான் உள்ளன..

அதேபோல, எதிர்கால அரசியல் எப்படிப்போகும் என்பதைக் கணிப்பதில் பல முறை சோவுக்கு வெற்றியே கிடைத்திருக்கிறது

1972-ல் திமுகவிலிருந்து எம்ஜிஆர் நீக்கப்பட்டவுடன், அவர் பெரிய அளவில் அரசியல் விஸ்வரூபம் எடுப்பார்..திமுகவுக்கு நிரந்தர தலைவலியாக மாறுவார் என்று கருணாநிதியை எச்சரித்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். முதலாமவர், முரசொலி மாறன். இரண்டாவது பத்திரிகையாளராய், சோ.

இந்தியாவின் எத்தனையோ பெரிய பெரிய ஆளுமைகளோடு சர்வ சாதாரணமாகப்பழகியவர். எதிர்ப்பது என்றால் அவ்வளவு உறுதியாக இருப்பார்.1975ல் இந்திராவின் எமர்ஜென்சியை அவர் எதிர் கொண்ட விதம் பிரமிப்பானவை. அதனால்தான் தேசிய அளவில் உள்ள பல தலைவர்களை அவர் ஈர்த்து கடைசிக் காலம்வரை அவர்களுடனான நட்புறவை  பின்னடையே இல்லாமல் பராமரிக்க முடிந்தது..

குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை ஒரு முறை துக்ளக் ஆண்டு விழாவுக்கு அழைத்திருந்தார், மேடையில் பேசிய சோ, அடுத்தபடியாக மெர்சென்ட் ஆப் டெத். அதாவது மரண வியாபாரி உரையாற்றுவார் எனச் சொல்லி நிறுத்தினார்..

சில விநாடிகள் இடைவெளி விட்டு தொடர்ந்து, பயங்கரவாதத்திற்கு எதிரான மரண வியாபாரி, ஊழலுக்கு எதிரான மரண வியாபாரி… என்று அடுக்கிக்கொண்டே போக, அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது..மேடையிலும் அப்படியொரு டைமிங் கொடுத்து ஜொலிப்பதில் அவர் கைதேறியிருந்தார்..

தமிழகத்தில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களைக் கடுமையாக எதிர்ப்பார். அதே நேரத்தில் அவர்கள் அரசியல் ஆலோசனை கேட்டால் தயங்காமலும் சொல்வார்..

சோவை கடுமையாக விமர்சிக்கும் அரசியல் தலைவர்கள் எல்லோருமே அவருடன் தனிப்பட்ட ரீதியில் நட்பு வைத்திருக்கவே விரும்பினார்கள். சோவின் செல்வாக்கு, சட்ட அறிவு, பல விஷயங்களில் அவர் பெற்றிருந்த ஞானம் பற்றி அவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது..

மேல் மட்டத்தில் அரசியல் காய்களை நகர்த்தும்போது உதறவேண்டியதை உதறாவிட்டால் கரைசேர முடியாமல் மூழ்கிவிடுவோம் என்பது அவர்களுக்குத்தானே தெரியும்..

அதனால்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் ஒவ்வொரு தலைவர்களுக்கு அவரின் அரசியல் ஆலோசனை, கூட்டணி கட்டமைப்பு போன்ற விஷயங்களில் சோவின் தயவு தேவைப்பட்டது.. ஆனால் பாவம் அந்த தலைவர்களின் தொண்டரடிப்பொடிகள்தான், இது புரியாமல் சோவை அடிக்கடி அர்ச்சித்து வந்தார்கள்.

எவ்வளவு உயர்வான மனிதர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும், அடுத்த விநாடியே எளிய மனிதருடன் பேச நேர்ந்தாலும் அதற்கேப்ப தன்னை தயார்ப்படுத்திக்கொள்ளும் அவரின் பாங்கு அலாதியானது..

 

2003ல் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக தி ஹிந்து பத்திரிகை பிரசுரித்த ரைசிங் இன்டாலரன்ஸ் என்ற கட்டுரைக்காக,, ஹிந்து எடிட்டோரியல் புள்ளிகளை அரசு அப்படித் துரத்தித் துரத்தி வேட்டையாடியது..

ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்தும் சோ ஆட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.. பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் ஜெயலலிதாவுக்கு புத்திபுகட்டும் விதமாக, ரைசிங் இன்டாலரன்ஸ் கட்டுரையை மற்ற பத்திரிகைகள் அனைத்து மறுபிரசுரம் செய்யவேண்டும் என்று வாளை சுழற்றினார்..

நேர்மை, மனுதர்மம், ஆன்மீகம், ஊழல் எதிர்ப்பு பத்திரிகை சுதந்திரம் என என்றெல்லாம் எழுத்துக்களில் முழங்கிய ஆளுமை மிக்கவர் சோ,

அப்படிப்பட்டவர் ஊழல் பணத்தில் ஊற்றெடுத்த மதுபான உற்பத்தி நிறுவனங்களோடு நிர்வாக ரீதியாய் தன்னை தொடர்புப்படுத்திக் கொண்டு கடும் விமர்சனத்தைச் சந்திக்க நேர்ந்தது, காலத்தால் அழிக்க முடியாத அவருடைய கருப்பு பக்கங்கள்..

 

 

முதலமைச்சர் ஜெயலலிதா வீடு தேடிவந்து ஆசி வாங்கும் அளவுக்கு அவரின் நம்பிக்கை, நட்பு, பேரன்பு ஆகியவற்றைப் பெற்றவர் சோ. ஜெயலலிதா காலமான இரண்டாவது நாளிலேயே சோ மட்டும் இறக்காமல் இன்னும் சில காலம் உயிரோடிருந்திருந்தால் பல தகவல்களை அவர் வாய் சொல்லியிருக்கலாம்.. ஆனால் காலத்தின் கோலம் அப்படி நடக்கவில்லை.

சோவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று