டெல்லி:
புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு தடை கோரி திமுக தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தக்கூடாது என்றும், ஏனைய 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்திக்கொள்ளலாம் என்று அதிரடி உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தில் புதியதாக 5 மாவட்டங்கள் புதிய தொடங்கப்பட்ட நிலையில், அங்கு வார்டு வரையறை செய்யாமல், தேர்தல் நடத்தக்கூடாது என்று திமுக உள்பட வாக்காளர்கள் தரப்பிலும், உச்சநீதி மன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுமீதான விசாரணை நேற்று பரபரப்பாக நடைபெற்றது.
அப்போது, தமிழகஅரசு தரப்பில், தொகுதி மறுவரையறை பணிகள் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்துள்ளோம் அதன்படியே தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட தலைமைநீதிபதி பாப்டே, ஏற்கனவே உள்ள மாவட்டத்தின் வார்டுகள் புதிய மாவட்டங்களுக்கு எப்படிப் பொருந்தும் ? என கேள்வி எழுப்பியவர், மறுவரையறை முடியாத 9 மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிவைக்க முடியுமா? என்பது குறித்து விளக்கம் அளிக்கும் தமிழகஅரசுக்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் விசாரணை நடைபெற்றது. தமிழகஅரசின் கோரிக்கைக்க, திமுக வழக்கறிஞர், கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தடைவிதித்தால் மொத்தமாக தடைவிதியுங்கள் இல்லை என்றால் குழப்பம் ஏற்படும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், 9 மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம் என்றும் மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம் என்றும் கருத்து தெரிவித்தனர். அதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை 10.30 மணி அளவில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.