சென்னை: திருநங்கைகளுக்காக ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை நமிதா ஸ்பெயின் சென்றுள்ளார்.
இதுகுறித்து கூறப்படுவதாவது; சென்னை ராயப்பேட்டையில் மாரிமுத்து – வெண்ணிலா தம்பதிக்குப் பிறந்தவர் நமிதா. தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தவர். தற்போது மாடலிங் செய்வதுடன், திரைப்படங்களிலும் முகம் காட்டி வருகிறார்.
இவருக்கு இளம் வயதிலிருந்தே மாடலிங் துறையில் விருப்பம் அதிகமாம்! கடந்த 2014ம் ஆண்டில் மிஸ் சென்னை பட்டம் வென்ற இவர், 2015ம் ஆண்டில் கூவாகம் பட்டத்தையும் தட்டிச் சென்றார்.
மேலும் 2017ம் ஆண்டு பெங்களூரில் நடந்த அழகிப் போட்டியிலும் பட்டம் வென்றவர், 2018ம் ஆண்டில் மிஸ் இந்தியாப் பட்டத்தையும் தனதாக்கினார். தற்போது உலகளவிலான போட்டிக்காக ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் சென்றுள்ளார்.
திருநங்கைகளுக்கான உலக அழகிப் போட்டி கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், இதுவரை இந்தியா சார்பாக யாரும் கலந்துகொள்ளாத நிலையில், தற்போது அந்தக் குறையைப் போக்கும் வகையில் நமிதா கலந்துகொள்கிறார்.