கவுகாத்தி
ஜப்பான் பிரதமரின் கவுகாத்தி வருகையையொட்டி நகரை அழகு படுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வட இந்தியாவில் வெற்றிலை பாக்கு, பான்பராக், புகையிலை போன்றவற்றைப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இது ஏழை, பணக்கார வித்தியாசம் இன்றி உள்ள பழக்கமாகும் அத்துடன் இந்த பழக்கம் உள்ளவர்கள் சாலையில் எந்த இடத்திலும் துப்புவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. பல அரசு கட்டிடங்கள், தனியார் கட்டிடங்கள் உள்ளிட்ட எதுவும் துப்புவர்களிடம் இருந்து தப்புவது இல்லை.
கவுகாத்தி நகருக்கு இந்த மாதம் 15 ஆம் தேதி அன்று நமது பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சொ அபே ஆகியோர் ஒரு கூட்டத்தில் கலந்துக் கொள்ள உள்ளனர். அவர்கள் வருகையையொட்டி கவுகாத்தி நகரை அழகு படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதில் ஒரு கட்டமாகச் சாலை நடுவில் பொருத்தப்பட்டுள்ள சாலைப் பிரிவுகளில் புதிய வண்ணம் அடிக்கப்பட்டு வருகின்றன. புதியதாக வண்ணம் பூசப்பட்டுள்ள இந்த சாலை பிரிவுகளில் கார்களில் பயணம் செய்பவர்கள் உள்ளிட்ட பலர் பான்பராக் மற்றும் புகையிலை எச்சிலைத் துப்பி விட்டு சென்று விடுகின்றனர்.
எனவே இவ்வாறு எச்சில் துப்புவோரிடம் இருந்து சாலைப் பிரிவைக் காக்க அரசு அதிகாரிகள் இந்த பிரிவுகளின் மீது பிளாஸ்டிக் உரைகளைப் பொருத்தி உள்ளனர். தற்போது நாடெங்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என அனைத்து மாநில அரசுகளும் கூறி வரும் வேளையில் அரசு அதிகாரிகளே பிளாஸ்டிக் உரையைப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.