லக்னோ
உத்தரப்பிரதேச பாஜக ஆட்சிக் காலம் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் மிகவும் மோசமாக உள்ளதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்திரப் பிரதேச பாஜக அரசில் பெண்களுக்குப் பாதுகாப்பு சிறிதும் இல்லை எனக் குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலை மற்ற மாநிலங்களிலும் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சமீபத்தில் பாஜகவில் இணைந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் சஷி பூஷன் குறித்து பெண்கள் போராட்டம் நடத்தி உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சஷி பூஷன் சமீபத்தில் பாஜகவில் இணைந்து அம்மாநில தேர்தலில் போட்டி இட்டார். அவர் தனது பள்ளி ஆசிரியையை கொன்ற வழக்கில் ஜாமீனில் வந்துள்ளார். அவர் பாஜகவில் இணைந்தததை எதிர்த்துப் பெண்கள் போராட்டம் நடத்தினர். அந்த பெண்களுக்கு ஆதரவாகக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரும் போராட்டத்தில் இறங்கியதால் குடும்பத்தினர் அடித்து நொறுக்கப்பட்டுள்ளனர்.
நேற்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டிவிட்டரில்,”நமது மாநிலத்தில் தொடர்ந்து நமது சகோதரிகள் மற்றும் மகள்கள் மீதான கொடுமை, கொலை மற்றும் பலாத்கார குற்றங்கள் அதிகரித்து வருவது மனதுக்குத் துயரத்தை அளிக்கிறது. இந்த ஆட்சியின் கால கட்டம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குப் பாதுகாப்பு விவகாரத்தில் மிகவும் மோசமாக உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது: என இந்தியில் பதிந்துள்ளார்.
அவர் தனது பதிவில் மாநிலத்தில் நடந்த எந்த ஒரு பலாத்கார சம்பவத்தையும் குறிப்பாகத் தெரிவிக்கவில்லை.