சென்னை:

“தாயகத்திற்கு திரும்பியுள்ளேன்” என்று  திமுகவில் இணைந்த பாஜக மாநில துணைத்தலைவர் அரசகுமார் தெரிவித்து உள்ளார்.

கடந்த வாரம் புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பா.ஜ.க துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் , அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த ஸ்டாலின் புகழ்ந்து பேசினார். மேலும், ‘எம்.ஜி.ஆருக்கு பிறகு, தான் ரசித்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்ம், அவருக்கு முதல்வர் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் கிடையாது,  ஆட்சி அதிகாரம் ஜனநாயக முறைப்படி கிடைக்க வேண்டுமென காத்திருக்கிறார்…. காலம் கணியும் மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராவார் என பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அத்துடன், தான் திமுகவின் கரை வேட்டி கட்ட தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அரசகுமாரின் இந்த பேச்சு பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாஜக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு வந்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்க தேசிய தலைமைக்கு தமிழக பாஜக பரிந்துரை செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசகுமார், என் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில தலைமைக்கு இல்லை என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்டுத்தினார். இதனால், அரசகுமார் திமுக வேட்டி கட்ட தயாராகி விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்த அரசகுமார்,  மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

பின்னர் செய்தியளார்களிடம் பேசியவர்,  “ஸ்டாலின் குறித்து பேசியதற்காக, என் வாழ்நாளில் கேட்கக்கூடாத அருவருக்கத்தக்க வார்த்தைகளை எதிர்கொண்டேன். மனம் சோர்ந்து இருந்த நேரத்தில், திமுகவில் இணைத்துள்ளேன்.

இன்னும் சில காலத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையும்; அதற்கு நான் உழைப்பேன்; பாஜக தேசிய தலைமையை விமர்சிக்க விரும்பவில்லை. தாயகத்திற்கு திரும்பியுள்ளேன்”.

இவ்வாறு அவர் கூறினார்.