டெல்லி:

நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கக்கோரி 6 மாநில நிதி அமைச்சர்கள் மத்தியநிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து வலியுறுத்தினர்.

நாடு முழுவதும் கடந்த 2017 ஆம் ஆண்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப் பட்டது. இதனால் ஏற்படும் இழப்புகளுக்கு இழப்பீடு தரப்படும் என மத்தியஅரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், இழப்பீடு தாமதமாக கொடுக்கப்படுவது தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் 6 மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மத்திய நிதி அமைச்சரை சந்தித்து பேசினார்.

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால், அதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை, மத்தியஅரசு ஈடுகட்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,   கடந்த 2015-16 ஆண்டு நிதியாண்டின் வரி வருவாயில் 14 சதவீதம் என்ற அடிப்படையில், மாநிலங்களின் வருவாய் பாதுகாக்கப்படும் என்றும்,  இழப்பீடு தற்காலிகமாக கணக்கிடப்பட்டு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்று மாநில அரசுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் டெல்லி, பஞ்சாப், புதுச்சேரி, மத்தியப் பிரதேசம், கேரளா, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் நிதியமைச்சரகள், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார்.

அப்போது, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை தாமதத்தால் மாநிலங்கள் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், அதனால் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். விரைவில் நிலுவைத் தொகை வழங்கப்படும் என நிர்மலா சீதாராமன் அவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  பஞ்சாப் மாநில நிதிஅமைச்சர் மன்ப்ரீத் சிங் பாதல் கூறியதாவது: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான, ஜி.எஸ்.டி., இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை. இப்போது, அக்டோபர் – நவம்பர் மாத இழப்பீடுகளும் சேர்ந்துள்ளன. இவற்றை, உடனே வழங்க வேண்டும் என, நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை விடுத்தோம். அவரும், விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இழப்பீடு தாமதமாக கொடுப்பதால், நாங்கள் இங்கு வந்து மத்திய அமைச்சரை சந்தித்து  பணம் கேட்பது வெட்கமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நவம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 1.03 லட்சம் கோடி ரூபாய் என்று  மத்தியஅரசு இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது. ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதிலிருந்து எட்டாவது முறையாக வசூல் 1 லட்சம் கோடியைத் தாண்டியது என்பதை இது காட்டுகிறது. இதில் மாநில ஜிஎஸ்டி பங்களிப்பு, 27,144 கோடி.

டெல்லியின் நிதியமைச்சர் மணீஷ் சிசோடியா கூறுகையில்,  தங்களுக்கு மத்திய அரசு நிலுவைத்தொகையாக ரூ. 50,000 கோடி பாக்கி வைத்துள்ளது. அது ஏன் வழங்கப்படவில்லை என்பதற்கான விளக்கங்களை அவர்கள் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.