டெல்லி:
தமிழகத்தில் புதியதாக அமைய உள்ள 6 மருத்துவக்கல்லூரிகளுக்கு மத்திய அரசு நிதியில் இருந்து முதல்கட்டமாக ரூ.137.16 கோடி ஒதுக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் ஏற்கெனவே 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிலையில், மேலும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க தமிழகஅரசு அனுமதி கோரியது. அதை ஆய்வு செய்த இந்திய மருத்துவ தொழில்நுட்ப குழு, தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க கடந்த அக்டோபர் மாதம் அனுமதி வழங்கியது.
அதன்படி, தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களான ராமநாதபுரம், விருதுநகர் இதுவரை மருத்துவக் கல்லூரிகள் இல்லாத நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட வுள்ளன. அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைகளுடன் இணைத்து ஏற்படுத்தப் படவுள்ள இந்தக் கல்லூரிகள் அனைத்திலும் தலா 150 இடங்கள் இருக்கும்.
இந்த கல்லூரிகள் அமைக்கும் பணிக்காக, முதல்கட்டமாக மத்திய அரசு ரூ.137.16 கோடி ஒதுக்கி இருப்பதாக அறிவித்து உள்ளது. இதன் காரணமாக விரைவில், கல்லூரிப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.