டில்லி
தொடர்ந்து 2 நாட்களாக எச் டி எஃப் சி வங்கி இணையச் சேவை முடங்கியதால் சுமார் 4.5 கோடி வாடிக்கையாளர்கள் சிரமத்தில் வாடுகின்றனர்.
தற்போது அனைத்து வங்கிகளும் இணையத்தின் மூலம் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல வாடிக்கையாளர்கள் தங்கள் கணினி மற்றும் மொபைல் மூலம் வங்கிக்கணக்குகளை இயக்கி வருகின்றனர். இதனால் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் நேரம் மிச்சமாவதால் பலரும் இந்த வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முதல் எச்டிஎஃப்சி இணைய மற்றும் மொபைல் வங்கிச் சேவைகள் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சரி வர இயங்காமல் முடங்கி உள்ளது. சமூக வலைத் தளங்களில் இது குறித்து பலரும் புகார்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்த வங்கியின் சுமார் 4.5 கோடி வாடிக்கையாளர்கள் சிரமம் அடைந்துள்ளதாகத் தெரிவித்து வருகின்றனர்.
வங்கி வெளியிட்டுள்ள செய்தியில், “எங்கள் வங்கியின் நெட் பேங்கிங் சேவை மற்றும் மொபைல் பேங்கிங் ஆப் சேவை தொழில்நுட்பக் கோளாற்றின் காரணமாகத் தற்காலிகமாக முடங்கியுள்ளது. இதைச் சரி செய்ய எங்களது தொழில்நுட்ப வல்லுநர்கள் துரித கதியில் செயல்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சினைகளை இன்னும் சில மணி நேரத்தில் தீர்த்துவிடுவோம் என நம்புகிறோம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்” என தெரிவிக்கபட்டுள்ளது.