சென்னை;
தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநி முதல்வர் பழனிசாமியின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவராக மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
“உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. ஆணையத்தின் அறிவிப்பு என்பது தேர்தலை நடத்தவா? நிறுத்தவா? என்ற கேள்வி எழுகின்றது. சிற்றூராட்சி, வட்டார ஊராட்சி, மாவட்ட ஊராட்சி ஆகிய அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடக்கும் என்றும் அவையும் இரண்டு கட்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடத்த வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கான தேர்தல் குறித்தும் மாவட்ட ஊராட்சி அமைப்புகள் ஏற்படுத்துவது குறித்தும் எவ்விதத் தெளிவும் இல்லை. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பின்னர் நடதப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த விருப்பம் இல்லாத தமிழக அரசு குழப்பத்தை ஏற்படுத்தி தேர்தலை நிறுத்துவதற்கான வழிவகைகளை உருவாக்கி வருகின்றது.
இத்தகைய குழப்பங்களின் காரணமாக நீதிமன்றத்தால் தேர்தல் நிறுத்தப்பட்டால் பிறர் மீது பழி சுமத்தி தாங்கள் தப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு மேற்கொள்ளும் ஜனநாயக விரோதச் செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கதாகும். தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்படவில்லை என்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது.
முதல்வர் பழனிசாமியின் விருப்பத்தை நிறைவேற்றக் கூடியவராக தேர்தல் ஆணையர் பழனிச்சாமி செயல்பட்டு வருகின்றார் என்று கருதும் அளவுக்கே தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தேர்தல் ஆணையத்தின் இன்றைய அறிவிப்பு தேர்தலை நடத்துவதற்காக அல்ல. மாறாக, ஆளும் கட்சித் தேர்தலை நடத்திட வேண்டாம் என்கிற விருப்பத்தை நிறைவேற்றிடக்கூடிய அறிவிப்பாகும்.
கிராமம், நகரம் என்று வேறுபாடின்றியும், புதிய மாவட்டங்களையும் இணைத்து ஒரே நாளில் ஜனநாயக முறைப்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்திட, தமிழ்நாடு அரசும், தேர்தல் ஆணையமும் முன் வர வேண்டும்” .
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
அதுபோல மார்க்சிய கம்யூனிஸ்டு மாநிலத் தலைவர் பாலகிருஷ்ணனும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
தேர்தல் அறிவிப்பு மோசடியானது என்றும், அதை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இப்போது அறிவித்து உள்ள தேர்தல் நடந்தால் குழம்பம் தான் உருவாகுமே தவிர நேர்மையாக தேர்தல் நடைபெறாது தேர்தல் நடைபெறக்கூடாது என்ற எண்ணத்தில் தான் இப்படி தேர்தலை அறிவித்துள்ளனர்.
ஊரகப்பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் என்பது உள்நோக்கம் கொண்டது, வார்டு வரைமுறை செய்ததில் நிறைய குளறுபடிகள் உள்ளன. தேர்தல் நடத்தக்கூடாது என்ற எண்ணத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டி உள்ளார்.