டெல்லி: நாட்டின் பொருளாதாரம் சரிவில் இருப்பது பெரும் அதிர்ச்சியாகவும், கவலை அளிப்பதாகவும் உள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார்.
நடப்பு நிதயாண்டின் 2வது காலாண்டின் ஜிடிபி புள்ளி விவரங்கள் இன்று வெளியிடப்பட்டன. 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் கடுமையான சரிவை சந்திருப்பது தெரிய வந்தது.
கடுமையான பொருளாதார சரிவுக்கு மத்திய அரசும், அதன் தவறான பொருளாதார கொள்கைகளுமே காரணம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.
இந் நிலையில் நாட்டில் பொருளாதாரம் சரிந்திருப்பது, பெரும் கவலை அளிக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். அவர் மேலும் கூறி இருப்பதாவது:
நாட்டின் ஜிடிபி 4.5 சதவீதம் என்பது ஏற்க முடியாது. இந்தியாவின் ஜிடிபி 8 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை இருக்க வேண்டும். ஆனால் முதல் காலாண்டில் 5 சதவீதம் என்பதே அதிர்ச்சி தான்.
அதன்பிறகு 2வது காலாண்டிலும் சரிந்து 4.5 சதவீதமாக இருக்கிறது, மிகவும் கவலை தரும் ஒன்றாகும். உரிய பொருளாதார திட்டங்கள் மூலமாகவே சரிவை மீட்டெடுக்க முடியும்.
தற்போது நாட்டில் பொருளாதார சரிவு இல்லை என்று யாராலும் மறுக்க முடியாது. விவசாயிகள், இளைஞர்கள், ஏழைகள் என பலதரப்பிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றார்.