சென்னை:

ள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரி உச்சநீதி மன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ள நிலையில், செய்தி யாளர்களிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தடை பெறுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்றும், உள்ளாட்சி தேர்தலை முறைப்படுத்தி நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம் என்று திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான  ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, சுழற்சிமுறை உள்ளிட்ட சட்ட நடவடிக்கை முறைகளை நிறைவேற்று தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரியும், அதுவரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக நேற்று புதிய மனு தாக்கல் செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடக்காதற்கு திமுக தான் காரணம் என ஆளும் கட்சி உள்பட தமிழக அரசியல் கட்சிகள்  கூறி வரும் நிலையில் திமுக புதிய மனுவை தொடர்ந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக அரசு திமுகவின் நடவடிக்கையை கடுமையாக சாடி வருகிறது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  உள்ளாட்சி தேர்தலை முறைப் படுத்தி நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். முறைப்படுத்தாமல் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும், சந்திக்க தயார் என்று கூறினார்.

நீதிமன்றத்துக்கு சென்று திமுக தடை பெறுவதாக கூறுவது  தவறான குற்றச்சாட்டு என்று விளக்கம் அளித்தவர்,  உள்ளாட்சித் தேர்தலில் வார்டு வரையறையை அதிமுக அரசு இதுவரை செய்யவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறு வரையறையை அரசு செய்யவில்லை. .  உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அரசு ஏராளமான குழப்பங்களை செய்துள்ளது.  யாராவது நீதிமன்றம் சென்றால் தேர்தலை நிறுத்திவிடலாம் என அதிமுக நினைக்கிறது”

உள்ளாட்சி மன்றத் தேர்தலை அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து 3 ஆண்டுகளாக நடத்தாமல், ‘ஏதாவது சில காரணங்களைச் சொல்லி யாராவது நீதிமன்றத்திற்கு சென்று தடை பெறுவார்களா? – தடை பெற்று அதை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும்’, என்கிற ஒரே நோக்கத்தோடு அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆனால், தேர்தலை நிறுத்துவதற்கான எல்லா சதித் திட்டங்களையும் தீட்டி, அதற்கான வழிவகைகளை வகுத்துவிட்டு, தி.மு.க.,தான் நீதிமன்றத்திற்குச் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று, திட்டமிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல், கடைசியில் இருக்கும் கடைக்குட்டி அமைச்சர் வரை தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களாவது ஏதோ அரசியல் நோக்கத்தோடு சொல்வதை வாதத்திற்கு ஏற்றுக் கொண்டாலும், ஊடகத்துறையில் இருக்கும் நீங்களும் திட்டமிட்டு, ஆளுங்கட்சிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாதது போல், தி.மு.க.,தான் நீதிமன்றத் திற்குச் சென்று தடை உத்தரவு பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று, தொடர்ந்து ஊடகத்தில் விவாத நிகழ்ச்சிகளாக இருந்தாலும் – செய்திகளாக இருந்தாலும், அந்தப் பணியை திட்டமிட்டு செய்துகொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது; வேடிக்கை மட்டுமல்ல – வேதனையாகவும் இருக்கிறது !

நான் ஒரு உண்மை நிலையை உங்களிடத்தில் சொல்லப்போகிறேன். இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய குழப்பங்கள்;

ஒன்று – உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வார்டு வரையறையை அரசு இதுவரை செய்யவில்லை;

இரண்டாவதாக – புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வார்டு மறுவரையறைப் பணிகளை அரசு இதுவரை செய்யவில்லை;

அடுத்தது, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு வார்டு வரையறைப் பணிகளை இதுவரை மேற்கொள்ளவில்லை.

பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியின் பட்டியலின – பழங்குடியின மற்றும் பெண்களுக்கான ஒதுக்கீட்டை இன்னும் அ.தி.மு.க. அரசு செய்யவில்லை; அதேபோல், மாவட்டப் பஞ்சாயத்துக்கான ஒதுக்கீடும் இதுவரை ஆளும் அ.தி.மு.க. அரசு செய்யவில்லை.

இதுதான் இருக்கக்கூடிய நிலை!

இதுமட்டுமின்றி, சில மாதங்களுக்கு முன்னால் மாநகராட்சி மேயர், நகராட்சி – பேரூராட்சித் தலைவர்களெல்லாம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால், திடீரென்று, அண்மையில் அதை மாற்றி, மறைமுகத் தேர்தல் என்கிற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படி பல குழப்பங்களைச் செய்து, இதன்மூலம் யாராவது நீதிமன்றத்திற்குச் சென்று – இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொல்கிறபோது, நீதிமன்றம் அதற்குத் தடைபோடும். தடை போட்டால், தேர்தலை நிறுத்திவிடலாம் என்கிற அந்த எண்ணத்தில்தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே தவிர வேறல்ல!

‘சட்டரீதியான அனைத்து நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என நம்புகிறோம்’ என்று உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவு போட்டுள்ளது. ஆகவே, நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன், முறைப்படுத்தி இந்தத் தேர்தலை நடத்திடவேண்டும் என்பதில் தி.மு.க. விழிப்போடு இருக்கிறது.

அதேசமயம், எது எப்படி இருந்தாலும், ஒருவேளை முறைப்படுத்தப்படாமல் தேர்தல் நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டால் அதையும் சந்திக்க தி.மு.க. தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.