மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில், இன்று மாலை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில், பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள  400 விவசாயிகளுக்கு சிவசேனா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.  உத்தவ் தாக்கரே பதவி ஏற்பு விழாவை காண மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிவாஜி பூங்காவில் குவிந்து வருகின்றனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா இடையே 30 ஆண்டுகளாக தொடர்ந்து வந்த கூட்டணி உடைந்த நிலையில், அங்கு ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதையடுத்து, ஆட்சி அமைக்கும் முயற்சி மேற்கொண்ட சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  கட்சிகளின் ஆதரவை நாடியது. இதில் ஒற்றுமை ஏற்பட்ட நிலையில், 3 கட்சிகளும் சேர்ந்து “மகாராஷ்டிரா முன்னேற்ற முன்னணி” ( ‘மகா விகாஸ் அகாதி’) என்ற கூட்டணியை உருவாக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளன.

இதைத்தொடர்ந்து, ந்த கூட்டணி சார்பில் முதல்வராக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே  தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை மும்பை தாதர் பகுதியில் உள்ள  சிவாஜி பூங்கா மைதானத்தில் பதவி ஏற்க உள்ளார்.

பதவி ஏற்பு விழாவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா உள்பட  நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்களை அழைத்துள்ள நிலையில், பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளும்படி 400 விவசாயிகளுக்கு சிவசேனா கட்சி சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே 400 விவசாயிகளும் அவர்களது குடும்பத்தினர் என 700 பேர் வருவார்கள் என்று தெரிகிறது. விவசாயிகள் அமர சிவாஜி பூங்கா மைதானத்தில் தனி இடம் வசதி செய்யப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய மந்திரிசபை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க மகாராஷ்டிர மாநிலம் முழுவதிலும் இருந்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தொண்டர்கள் மும்பையில் குவிந்தபடி உள்ளனர். இந்த பதவி ஏற்பு விழாவுக்கு   3 கட்சிகளும் தொண்டர்களை திரட்டுவதால் 3 முதல் 4 லட்சம் பேர் வரை சிவாஜி பூங்கா மைதானத்துக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பதவி ஏற்பு விழாவை குறுகிய நேரத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், தலைவர்கள் சீராக வந்து செல்வதை உறுதிப்படுத்தவும் சுமார் 3 ஆயிரம் போலீசார் சிவாஜி பூங்கா மைதானத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். விழாவுக்கு வருபவர்கள் அமர சுமார் 30 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன.

, சிவசேனா தலைவரும், ‘மகா விகாஸ் அகாதி’ தலைவருமான உத்தவ் தாக்கரே இன்று மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்பு விழாவை முன்னிட்டு சிவாஜி பூங்காவில் உள்ள ‘பால் தாக்கரே சமாதி’ அலங்கரிக்கப்பட்டுள்ளது.