மும்பை: மும்பையில் சொகுசு ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர்.
தாம் முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறோம் என்ற கனவுடன் இருந்த சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரேவின் கனவை சிதைக்கும் வகையில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது. அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி தரப்பட்டது.
ஜனநாயக படுகொலை, துக்க நாள், கருப்பு நாள் என்று சிவசேனா, என்சிபி, காங். ஆகிய கட்சிகள் கூக்குரலிட்டன. ஆனால் பலன் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றன.
இந்த வழக்கின் விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் தமது கட்சி எம்எல்ஏக்களுடன் பாஜக எங்கே குதிரை பேரம் நடத்தி விடுமோ என்று அஞ்சி சிவசேனாவும், என்சிபியும் தமது கட்சி எம்எல்ஏக்களை மும்பையில் சொகுசு ஓட்டல்களில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளது.
அந்தேரியில் ஓட்டலில் தங்கியுள்ள சிவசேனா எம்எல்ஏக்களை உத்தவ் தாக்கரே சந்தித்தார். பின்னர், என்சிபி எம்எல்ஏக்கள் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு அவர் சென்றார்.
அவருடன் கட்சியின் மூத்த தலைவர்களும், ஆதித்யா தாக்கரேவும் இருந்தனர். அங்கு சரத் பவாரும், உத்தவ் தாக்கரேவும் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பில் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.