டில்லி
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.
நேற்று சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க இருந்த நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பாஜகவின் தேவேந்திர ஃபட்நாவிசுக்கு மீண்டும் முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன் தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்றார். இதை எதிர்த்து சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இன்று நடந்த அந்த வழக்கின் விசாரணையில் பாஜக தரப்பில் மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஆட்சி அமைக்கப்பட்டு விட்ட படியால் விசாரணை நடத்தக் கூடாது என வாதிட்டது. அத்துடன் இந்த மனு முதலில் மகாராஷ்டிர உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்ப்பட்டிருன்க்க வேண்டும் எனவும் பாஜக தரப்பில் கூறப்பட்டது.
ஆளுநரின் ஒருதலைபட்ச செயல்பாட்டினால் பாஜக ஆட்சி அமைத்துள்ளதாக சிவசேனா குற்றம் சாட்டியது. காங்கிரஸ் தரப்பில் ஒரு நாள் கிடைத்தாலும் அது குதிரைப் பேரத்துக்கு வழி வகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி தாங்கள் அஜித் பவாரை சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டதால் அவர் துணை முதல்வராக நீடிக்க முடியாது எனத் தெரிவித்தது.
இந்த வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்றம் இது குறித்து நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நோட்டிஸ் அனுப்பியது. அத்துடன் நாளை ஆளுநர் தேவேந்திர ஃபட்நாவிஸுக்கு அரசு அமைக்க அளித்த அழைப்புக் கடிதத்தையும், ஃபட்நாவிஸ் ஆளுநருக்கு அளித்த பெரும்பான்மை கடிதத்தையும் நாளை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவு இடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்தி வைத்துள்ளது. அத்துடன் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் உடனடியாக பெரும்பான்மை வாக்கெடுப்பு எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.