போபால்
மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த வியாபம் தேர்வு ஊழல் வழக்கில் 31 பேரைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரசுப் பணியாளர்கள் மற்றும் உயர்கல்வி சேர்ப்பு ஆகியவற்றுக்கு நுழைவுத் தேர்வுகளை மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு ஆணையம் நடத்தி வந்தது. இந்த ஆணையத்தை இந்தியில் சுருக்கமாக வியாபம் (விவாயசிக் பரிக்ஷா மண்டல்) என அழைத்து வந்தனர்.
இந்த ஆணையம் கடந்த 2013 ஆம் வருடம் காவல்துறை காவலர்களுக்கான தேர்வு ஒன்றை நடத்தியது. அந்த தேர்வில் ஆள் மாறாட்டம், மோசடி, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட பல முறைகேடுகள் நடந்ததாகப் புகார் எழுந்தது. அதையொட்டி சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் 91 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்
நேற்று சிபிஐ நீதிமன்றம் இந்த வழகில் 31 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. இதில் 12 பேர் ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவருக்காக தேர்வு எழுதியவர்கள் ஆவார்கள். அத்துடன் 7 இடைத் தரகர்களும் இவர்களில் அடங்குவர். இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி எஸ் பி சாகு இவர்களுக்கான தண்டனை வரும் 25 ஆம் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.