பெங்களூர்: மனித தலைமுடியை பயிர்களுக்கான உரம் தயாரிக்கப் பயன்படுத்த முடியும் என்று ஆய்வுசெய்து கண்டுபிடித்துள்ளனர் கர்நாடக பள்ளி மாணவிகள் இருவர்.
கர்நாடகாவின் பெலகாவி நகரைச் சேர்ந்த பள்ளி மாணவிகளான குஷி அங்கோல்கர் மற்றும் ரெமினிக்கா ஆகியோர்தான் அந்த மாணவிகள். இவர்கள் இருவரும் 9ம் வகுப்பு மாணவிகள். கேந்திர வித்யா பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இந்த ஆராய்ச்சியை இவர்கள் 4 மாதங்களுக்கு முன்னதாக தொடங்கினார்களாம். இவர்களின் ஆராய்ச்சிக்கு அதே ஊரிலுள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிராடிஷனல் என்ற அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் சிலர் உதவியுள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில், மனிதனின் தலைமுடி, திரவக் கரிம உரத்தை உற்பத்தி செய்து, தாவரங்களின் வளர்ச்சிக்கு துணைபுரிவதாகக் கண்டுபிடித்துள்ளனர். முட்டைகோஸ், மிளகாய் மற்றும் தக்காளி உள்ளிட்ட பயிர்களிடம் அவர்கள் செய்த ஆய்வே வெற்றிக்கு வழிவகுத்தது என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வின் மூலமாக, அவர்கள் இருவரும், மாணாக்கர்களுக்கான தேசிய அறிவியல் மாநாட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தங்களின் ஆய்வை, கல்லூரி தோட்டம் ஒன்றிலும் சோதித்துப் பார்த்துள்ளனர்.
இவர்களின் ஆய்வுக்காக கீரைத் தோட்டம் அமைக்கப்பட்டிருந்தது. இதில், தலைமுடி உரம் பயன்படுத்தப்பட்ட கீரை சிறப்பாக வளர்ந்திருந்தது நிரூபிக்கப்பட்டது.