மும்பை

னாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர் சமஸ்கிருத பேராசிரியராகப் பணி புரிவதை எதிர்த்து மாணவர்கள் போராடக் கூடாது என பாஜகவைச் சேர்ந்த நடிகர் பரேஷ் ராவல் தெரிவித்துள்ளார்.

காசி நகரில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியரான ஃபிரோஸ் கான் என்பவர் சமஸ்கிருத பேராசிரியராக பணி அமர்த்தப்பட்டுள்ளார். இஸ்லாமியரான இவர் சமஸ்கிருத பேராசிரியராகப் பணி புரிவதை பாஜக மாணவர் அணியான அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பு எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறது.  இது நாடெங்கும் கடும் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

பிரபல பாலிவுட் நடிகரும் முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பரேஷ் ராவல் இந்த போராட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   அவர் தனது டிவிட்டரில், “பேராசிரியர் ஃபிரோஸ் கானுக்கு எதிராகப் போராட்டம் நடப்பதைக் கண்டு நான் அதிர்ந்தேன்.  மொழிக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு?  பேராசிரியர் பிரோஸ் கான் சமஸ்கிருத மொழியில் பட்ட மேற்படிப்பு மற்றும்  பிஎச்டி படித்துள்ளார்.         தயவு செய்து கடவுளே வெறுக்கும் இந்த முட்டாள் தனமான போராட்டத்தை நிறுத்துங்கள்” எனப் பதிந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மற்றொரு பதிவில், ”இந்த முறைப்படி பார்த்தால் மறைந்த பாடகர் முகமது ரபி எந்த ஒரு பக்திப் பாடலும் பாடி இருக்கக்கூடாது.   அதற்கு நவுஷத் இசை அமைத்திருக்க கூடாது.   பாடகர் முகமது ரபி பல பக்தி ரசம் சொட்டும் பாடல்களைத் திரைப்படத்திலும் தனிப்பாடலாகவும் பாடி உள்ளார்.” எனப் பதிந்துள்ளார்.