டில்லி
அருணாசலப் பிரதேச மக்களவை பாஜக உறுப்பினர் தபிர் காவ் இந்தியாவில் சுமார் 50 கிமீக்கும் அதிகமான நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே சுமார் 4000 கிமீ தூரத்துக்கு எல்லைப் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதி குறித்த தெளிவான பிரிவு இல்லாததால் அவ்வப்போது இரு நாட்டு வீரர்களும் மற்ற நாட்டு எல்லைக்குள் செல்வது வழக்கமாகி வருகிறது. இவ்வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய சீன எல்லைப்பகுதியில் உள்ள சீக்கிம் மாநிலத்தில் தோக்லாம் பகுதியில் சீன அரசு சாலை ஒன்றை அமைத்தது. அதை இந்தியா எதிர்த்தது.
இதையொட்டி இரு நாடுகளும் தங்கள் படைகளை அங்கு குவித்தன. இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளும் அபாயம் இருந்த நிலையில் 73 நாட்கள் கழித்து நடந்த பேச்சு வார்த்தைக்குப் பிறகு 2017ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சீனா சாலை அமைக்கும் பையை கை விட்டது. இந்தியா தனது படைகளைத் திரும்பப் பெற்றது.
தற்போது மக்களவையில் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜீரோ அவரில் அருணாசலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தபிர் காவ், “சீனப் படைகள் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் 50 கிமீ தூரத்துக்கு ஆக்கிரமிப்பு செய்துள்ளது. எப்போது அந்த மாநிலத்துக்கு ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் போன்ற யார் வந்தாலும் சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த மாதம் 14 ஆம் தேதி அன்று தவாங்க் பகுதியில் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்புக்குச் சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே இந்த மக்களவை மற்றும் ஊடகங்கள் இதற்கு எதிராக போராட வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் அருணாசலப் பிரதேசத்தில் மற்றொரு தோக்லாம் உருவாகும். அவ்வாறு உருவாக விடாதீர்கள்” என தெரிவித்தார்.
இதைப் போல் குற்றச்சாட்டை தபிர் காவ் ஏற்கனவே கடந்த செப்டம்பரில் கூறி உள்ளார். அப்போது அவர் சீன அரசு அருணாசலப் பிரதேச மாநிலத்தில் அத்துமீறி நுழைந்து ஒரு பாலம் கட்டி உள்ளதாகத் தெரிவித்தார். அதன் பிறகு அது இந்திய ராணுவத்தால் அமைக்கப்பட்ட தற்காலிகப் பாலம் என அரசு விளக்கம் அளித்தது. ஆயினும் அவர் தொடர்ந்து சீன ஆக்கிரமிப்பு பற்றிப் பேசி வருகிறார்.
தற்போதைய குற்றச்சாட்டு குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, “எல்லையில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. அங்கு அமைதி நிலவுகிறது. எல்லைப் பகுதி முடிந்தது தெரியாமல் இரு தரப்பிலும் எல்லையைத் தாண்டி வருவது நிகழ்ந்து வருகிறது. சீன படைகள் வந்தால் அதை நாம் சீன ஆக்கிரமிப்பு எனச் சொல்கிறோம். நமது படை அங்கு சென்றால் அவர்கள் இந்திய ஆக்கிரமிப்பு எனச் சொல்வார்கள்” எனக் கூறி உள்ளார்.